தமிழ் சிறுமி கற்பழித்து கொலை: கைதானவரின் குடும்பத்தினர் 4 பேர் கைது
ஜூகுவில் தமிழ் சிறுமியை கற்பழித்து கொன்றவரின் மனைவி, தாய் உள்பட 4 பேர் போலீசாரை மிரட்டியதாக கைது செய்யப்பட்டனர்.
மும்பை
ஜூகு நேரு நகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த வடிவேல் என்ற குண்டப்பா (வயது34) கைது செய்யப்பட்டார்.
சம்பவத்தன்று கடைக்கு சென்று கொண்டு இருந்த சிறுமியை ஏமாற்றி வீட்டுக்கு அழைத்து சென்று அவர் கற்பழித்தார். பின்னர் சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்த அவர், உடலை அந்த பகுதியில் உள்ள கழிவு நீர் தொட்டியில் போட்டார்.
இவர் ஏற்கனவே 5 வயது சிறுமியை கற்பழித்த குற்றத்துக்காக ஜெயில் தண்டனை அனுபவித்துவிட்டு கடந்த மாதம் தான் வெளியே வந்துள்ளார்.
இந்தநிலையில், ஜூகு போலீசார் குற்ற சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை நடத்த சென்றனர். அப்போது வீட்டில் இருந்த கைதி வடிவேலுவின் மனைவி முஸ்கான் வேதவள்ளி (20), அண்ணன் செல்லமுத்து (36), அண்ணி பானு (33), தாய் ராமாயி (55) ஆகியோர் போலீசாரை உள்ளே வர விடாமல் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
மேலும் அவர்கள் வீட்டுக்குள் சென்று ஆய்வு நடத்த விடாமல், போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் போலீசாரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கற்பழிப்பு வழக்கு கைதியின் குடும்பத்தினர் 4 பேரையும் கைது செய்தனர்.
இதற்கிடையே சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று அந்த சிறுமியின் உடல் இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதி ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story