தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்


தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
x
தினத்தந்தி 10 April 2019 4:45 AM IST (Updated: 10 April 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பழனிமாணிக்கத்துக்கு ஆதரவு திரட்டிய உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மற்றும் தஞ்சை சட்டசபை தொகுதி வேட்பாளர் டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோரை ஆதரித்து தஞ்சையை அடுத்த வல்லம் அண்ணா சிலை அருகில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நாங்கள் பிரசாரம் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் பெருமளவில் கூடுகிறார்கள். இதை மோடி எதிர்ப்பு அலை என சொல்லுகிறார்கள். ஆனால் ஸ்டாலின் ஆதரவு அலையே மக்கள் கூடுவதற்கு காரணம்.

மோடி பெயரை சொன்னாலே கழுவி, கழுவி ஊற்றுகின்றனர். உலக அளவில் இப்படி ஒரு பிரதமரை யாரும் பார்த்தது இல்லை. மோடி 5 ஆண்டு காலம் உலகம் சுற்றும் வாலிபனாக இருந்து 50 நாடுகளுக்கு மேலாக சென்றுள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டபோது நான் உள்பட பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தோம். ஆனால் மோடி வரவில்லை. வெளிநாட்டில் இருக்கும் கறுப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் தருவதாக சொன்னார். ஆனால் நாமம் தான் போட்டார். அந்த நாமத்தை நாமும் போட வேண்டும்.

பணமதிப்பிழப்பு செய்து புதிய இந்தியாவை பிறக்க செய்வேன் என்றார். தீவிரவாதத்தை ஒழிப்பேன் என்றார். ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு துணை போனவர்கள் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும்தான்.

கடந்த 5 ஆண்டுகளில் 3 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தியா முழுவதற்கும் மோடி தான் வில்லன். திரைப்படத்தில் வில்லனுக்கு துணையாக வருவது போல் எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் இருந்துகொண்டு மோடி சொல்வதை செய்து வருகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி குறித்து கடுமையாக விமர்சனம் செய்தவர் அன்புமணி ராமதாஸ். அவர்கள் ஆட்சிக்கு எத்தனை மார்க் என ராமதாசிடம் கேட்டபோது ஜிரோ மார்க்குக்கு கீழே உள்ள மார்க்கை தான் போட முடியும் என விமர்சனம் செய்தார். தற்போது அவர்கள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர்.

தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றி உறுதியாகி விட்டது. எதிர்த்து நிற்பவர்களை டெபாசிட் இழக்க செய்யவேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மரணம் அடைந்தபோது, அவரை அண்ணா நினைவிடத்தின் அருகே அடக்கம் செய்ய கூட இடம் ஒதுக்கி தரவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றுத்தான் அவரை அங்கு அடக்கம் செய்தோம். தமிழகத்தில் நடைபெறும் இரக்கமற்ற, மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் தி.மு.க.வினர், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் செங்கிப்பட்டி பஸ் நிலையம், பூதலூர் நால்ரோடு, திருக்காட்டுப்பள்ளி கடைத்தெரு, மேலத்திருப்பூந்துருத்தி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து விட்டு திருவையாறு மேலவீதியில் மாரியம்மன்கோவில் அருகில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பேசினார்.

இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு தஞ்சை அண்ணாநகர் மார்க்கெட் அருகில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் உதயநிதி ஸ்டாலின், 9.30 மணிக்கு மானம்புச்சாவடி மேக்ஸ்வெல் பள்ளி அருகிலும், 10 மணிக்கு கீழவாசல் மார்க்கெட், 10.30 மணிக்கு வடக்கு வாசல் நால்ரோடு, 11 மணிக்கு மாமாசாகிப்மூலை, 11.30 மணிக்கு மருத்துவக்கல்லூரி 3-வது கேட் அருகிலும் பிரசாரம் செய்கிறார். மாலை 4.30 மணிக்கு நாஞ்சிக்கோட்டையில் பிரசாரம் செய்கிறார்.

Next Story