அந்தியூர், புஞ்சைபுளியம்பட்டியில் காரில் வந்தவர்களிடம் ரூ.2 லட்சம் பறிமுதல்; பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை


அந்தியூர், புஞ்சைபுளியம்பட்டியில் காரில் வந்தவர்களிடம் ரூ.2 லட்சம் பறிமுதல்; பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 10 April 2019 3:45 AM IST (Updated: 10 April 2019 2:46 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர், புஞ்சைபுளியம்பட்டியில் காரில் வந்தவரிடம் ரூ.2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்.

அந்தியூர்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அனைத்து இடங்களிலும் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். அவ்வாறு நடக்கும் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் யாராவது கொண்டு வந்தால் அந்த பணத்தை பறிமுதல் செய்து அந்தந்த பகுதி தாசில்தாரிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள்.

பறிமுதல் செய்யப்படும் பணத்துக்கு உரிய ஆவணங்களை உரிமையாளர்கள் காட்டினால் மீண்டும் பணம் அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்திலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர ரோந்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அந்தியூர் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜான்இவித்னேசியர் தலைமையில் அதிகாரிகள் அந்தியூர்-சத்தி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி அதில் சோதனை செய்தார்கள்.

இந்த சோதனையில் காருக்குள் இருந்த ரூ.72 ஆயிரத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள். காரை ஓட்டி வந்த கோபியை சேர்ந்த செந்தில் என்பவரிடம் பணத்துக்கான உரிய ஆவணம் இல்லை. அதனால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து அந்தியூர் தாசில்தார் கணேசனிடம் ஒப்படைத்தார்கள்.

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள சின்னவாய்ப்புதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி வெங்கடாசலம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர், சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் பகுதியை சேர்ந்த சூர்யபிரகாஷ் (வயது 24) என்பதும் தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் சத்தியமங்கலம் தாசில்தார் கார்த்திக்கிடம் ஒப்படைத்தனர்.

Next Story