நாடாளுமன்ற தேர்தலில், தபால் ஓட்டு பதிவு சமூக வலைதளத்தில் வெளியீடு - செல்லாத வாக்காக மாற்ற நடவடிக்கை

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த தபால் ஓட்டு சீட்டு சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது. அதை செல்லாத வாக்காக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பொள்ளாச்சி,
தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகின்றது. இந்த பணியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதை தவிர போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த இருக்கின்றனர். எனவே தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் முன் கூட்டியே தபால் ஓட்டு போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த 7-ந்தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் வாக்களித்தனர். அப்போது அவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தபால் ஓட்டு சீட்டில் யாருக்கு வாக்கு? என்பதை கருப்பு மையால் டிக் செய்து அரசிதழில் பதிவு செய்ய அலுவலரிடம் கையெழுத்து வாங்கி, அங்குள்ள பெட்டியில் போட்டனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் வசிக்கும் அரசு ஊழியர் ஒருவர் தபால் ஓட்டு போடுவதற்கு முன் வாக்கு சீட்டில் டிக் செய்து விட்டு செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். இதை தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார். அதில் முதல் ஓட்டு முத்தான ஓட்டு அரசு ஊழியர்களுக்கு தலை வணங்குகிறேன். உதித்தாச்சு பொள்ளாச்சியில் உதயசூரியன் என்ற வாசகத்துடன், தி.மு.க. வேட்பாளர் சண்முகசுந்தரத்துக்கு வாக்களித்ததற்கான வாக்கு சீட்டும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அந்த முகநூல் பதிவை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-
தபால் ஓட்டு போட்ட ஒருவர் வாக்கு சீட்டை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அந்த முகநூல் பதிவுடன் புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகார் மனு கோவையில் உள்ள ஊடக தணிக்கை மற்றும் சான்றிதழ் குழுவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
அந்த குழுவினர் தான் சமூக வலைதளம் மற்றும் தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகளில் செய்திகள் தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள். சமூக வலை தளத்தில் பதிவு செய்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் புகார் கொடுக்கப்பட்ட முகநூல் பதிவில் உள்ள நபரிடம் விசாரணை நடத்தப்படும். மேலும் அந்த ஓட்டை கண்டுபிடித்து, அதை செல்லாததாக மாற்றவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story






