நாட்டில் ஏழ்மையுடன், காங்கிரசும் மறைய வேண்டும் : பிரதமர் மோடி ஆவேச பேச்சு


நாட்டில் ஏழ்மையுடன், காங்கிரசும் மறைய வேண்டும் : பிரதமர் மோடி ஆவேச பேச்சு
x
தினத்தந்தி 10 April 2019 5:34 AM IST (Updated: 10 April 2019 5:34 AM IST)
t-max-icont-min-icon

மைசூருவில் நடந்த பா.ஜனதா பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் ஏழ்மையுடன், காங்கிரசும் மறைய வேண்டும் என்று ஆவேசமாக கூறினார்.

மைசூரு,

கர்நாடகத்தில் சித்ரதுர்கா மற்றும் மைசூரு-குடகு, சாம்ராஜ்நகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி 9-ந் தேதி(அதாவது நேற்று) வருவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி விமானம் மூலம் கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவுக்கு வந்த மோடி அங்கு பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அதையடுத்து அவர் சித்ரதுர்காவில் இருந்து தனி விமானம் மூலம் சுமார் 4.45 மணியளவில் மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கிருந்து அவர் கார் மூலம் சுமார் 20 நிமிடத்தில் மைசூரு மகாராஜா கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த பா.ஜனதா பிரசார பொதுக்கூட்ட வளாகத்தை வந்தடைந்தார். உடனடியாக மேடையில் ஏறிய பிரதமர் மோடி, மைசூரு-குடகு தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பிரதாப் சிம்ஹா, சாம்ராஜ்நகர் தொகுதி வேட்பாளர் சீனிவாச பிரசாத் ஆகியோரை ஆதரித்து பேசினார். முதலில் அவர் கன்னடத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அதையடுத்து அவர் பேசும்போது கூறியதாவது:-

நான் மைசூருவுக்கு 3-வது முறையாக வந்திருக்கிறேன். முதலாவதாக கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்காக வந்தேன். பின்னர் 2016-ம் ஆண்டு மைசூரு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தேன். தற்போது 3-வது முறையாக மீண்டும் பிரசாரத்திற்காக வந்துள்ளேன்.

சாமுண்டீஸ்வரி சன்னிதானத்தின் கீழ் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் என் வணக்கம். நான் விஸ்வேசுவரய்யாவை வணங்குபவன். நான் கர்நாடகத்தில் சித்ரதுர்கா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளேன். அங்கெல்லாம் மக்கள் என்னை ஆசிர்வதிக்க தயாராக உள்ளனர். அதேபோல் மைசூரு பகுதி மக்களும் என்னை மீண்டும் ஆதரிக்க வேண்டும். பா.ஜனதா வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பொய்யானது. நம் நாட்டை பலமான நாடாக உருவாக்க உங்கள்(மக்கள்) ஆதரவு வேண்டும். இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியாவில் வளர்ச்சியும், உற்பத்தி திறனும் 2 மடங்கு அதிகரிக்கும். இந்தியாவை வளர்ச்சி அடைய வைப்பது தான் பா.ஜனதாவின் நோக்கம். ஏழைகள், நடுத்தர மக்கள், கிராம மக்களை முன்னேற வைப்பதுதான் எங்களுடைய திட்டம். மைசூரு-பெங்களூரு இடையே 8 வழிச்சாலை, உதான் திட்டத்தின் மூலம் மைசூரு மாவட்டத்தில் பயணிகள் விமான சேவை உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. கடந்த 70 ஆண்டுகளில் செய்ய முடியாத வளர்ச்சிப் பணிகளை எங்களுடைய 5 ஆண்டுகால ஆட்சியில் செய்து முடித்துள்ளோம்.

நாட்டின் 50 நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவைகளை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஒவ்வொன்றும் நிஜம். வீட்டுக்கடன், கல்விக்கடன்களுக்கு வட்டி குறைக்கப்பட்டுள்ளது. 3 கோடி விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சபரிமலை விவகாரத்தில் நாட்டு மக்களின் மனப்பான்மையை பா.ஜனதா புரிந்து கொண்டுள்ளது. மக்கள் மனப்பான்மைக்கு எதிராக பா.ஜனதா எதுவும் செய்யாது. அதனால் மக்கள் மீண்டும் எங்களை வெற்றிபெற செய்ய வேண்டும். உங்கள் எல்லோருடைய ஓட்டையும் மோடிக்காக ஒதுக்குங்கள்.

மண்டியாவில் மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவி சுமலதா அம்பரீசுக்கு அதிக அளவில் வாக்களித்து அவரை வெற்றிபெற செய்யுங்கள். இந்த முறையும் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்து ஆட்சியை பிடிக்க சக்தி கொடுங்கள். இந்த முறை வாக்களிக்கும் ஒவ்வொருவரின் ஓட்டும் வரலாறு படைக்கும் ஓட்டாக இருக்கட்டும்.

காங்கிரசார் மோடியை விரட்ட வேண்டும் என்று பேசுகிறார்கள். நாட்டில் காங்கிரசைத்தான் ஒழிக்க வேண்டும். அதைவிட ஏழ்மையை ஒழிக்க வேண்டும். நாட்டில் காங்கிரஸ் இருக்கும் வரை ஏழ்மை ஒழியாது. அதனால் ஏழ்மையுடன், காங்கிரசும் மறைய வேண்டும். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அபாயத்தில் சிக்கி உள்ளார். முதலில் அவர் கர்நாடகத்தில் போட்டியிட திட்டமிட்டார்.

ஆனால் தன்னை ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் தோற்கடித்து விடுவார்கள் என்று நினைத்து அவர் கேரள மாநிலத்திற்கு சென்றுவிட்டார். கர்நாடகத்தில் விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்யாமல் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு விவசாயிகளை அலைக்கழித்து வருகிறார்கள். இதனால் விவசாயிகள், முதல்-மந்திரி குமாரசாமி மீது வெறுப்பில் உள்ளனர்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி மேடையில் ஏறியதும் அவருக்கு கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா மற்றும் சிலர் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் நினைவுப்பரிசையும் வழங்கி கவுரவித்தனர். கூட்டத்தில் முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக், முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, வேட்பாளர்கள் சீனிவாச பிரசாத், பிரதாப் சிம்ஹா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் வருகையையொட்டி மைசூரு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கூட்டத்தில் மைசூரு, சாம்ராஜ்நகர், மண்டியா மற்றும் குடகு ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக பா.ஜனதாவினர் தெரிவித்தனர்.

Next Story