கன்டெய்னர் லாரியை சிறைபிடித்து போராட்டம், மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்த மேலும் ஒருவர் கைது - தி.மு.க. நிர்வாகிகள் மீதும் வழக்கு


கன்டெய்னர் லாரியை சிறைபிடித்து போராட்டம், மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்த மேலும் ஒருவர் கைது - தி.மு.க. நிர்வாகிகள் மீதும் வழக்கு
x
தினத்தந்தி 11 April 2019 4:45 AM IST (Updated: 10 April 2019 11:32 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் கன்டெய்னர் லாரியை சிறைபிடித்து போராட்டம் செய்ததில் மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கோவை,

கோவையை அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டுக்கு அனுப்பி வைக்க கொச்சி துறைமுகத்துக்கு 45 டன் தேயிலை தூள் 3 கன்டெய்னர் லாரியில் எடுத்துச்செல்லப்பட்டது. கடந்த 8-ந் தேதி இரவு 11 மணியளவில் அதில் ஒரு கன்டெய்னர் லாரி உக்கடம் ஆத்துப்பாலம் அருகே வேகமாக சென்றது.

இதனால் கன்டெய்னர் லாரியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கட்டுக்கட்டாக பணம் கொண்டு செல்லப்படுகிறது என்று நினைத்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த கன்டெய்னர் லாரியை மீட்டு கலெக்டர் அலுவலகம் கொண்டு வந்தனர்.

பின்னர் நேற்று முன்தினம் அந்த கன்டெய்னர் லாரி கலெக்டர் ராஜாமணி முன்னிலையில் திறக்கப்பட்டது. அதில் கலெக்டர் சோதனை செய்தபோது 15 டன் தேயிலைதூள் மட்டுமே இருந்தது. பணமோ, சந்தேகத்துக்கு இடமான பொருட்களோ அதற்குள் இல்லை. அத்துடன் அதில் இருந்த தேயிலை தூளுக்கு முறையான ஆவணங்களும் இருந்தன. வரியும் முறையாக செலுத்தப்பட்டு இருந்ததால் கன்டெய்னர் லாரி விடுவிக்கப்பட்டது.

இதற்கிடையே, கன்டெய்னர் லாரியின் உரிமையாளர், தனது லாரியை பொதுமக்கள் சிலர் சேதப்படுத்தியதாகவும், லாரியை ஓட்டிச்சென்ற டிரைவரை தாக்கியதாகவும் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்த முகமது சாஜித் (வயது 27) மற்றும் அடையாளம் தெரிந்த சில நபர்கள் மீது சொத்துக்களை சேதப்படுத்துதல், தாக்குதல், தவறான தகவலை பரப்புதல் உள்பட 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து முகமது சாஜித்தை கைது செய்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்த நிர்வாகி பெரோஸ்கான் (22) மற்றும் தி.மு.க. நிர்வாகிகளான குறிச்சி பிரபாகரன், கோட்டை அப்பாஸ், மசூத், யாசர், கனகராஜ், புவனேஸ்வரன், சி.ஐ.டி.யு.வை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, நந்தகுமார், ரமணி, கனகராஜ் ஆகியோருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பெரோஸ்கானை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக தி.மு.க. நிர்வாகி கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. பெரோஸ்கானை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன், தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகிறார்கள். 

Next Story