கோடைவிடுமுறையை பயன்படுத்தி தட்டச்சு, கணினி பயின்று தனித்திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் தலைமைஆசிரியர்கள் அறிவுரை வழங்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு


கோடைவிடுமுறையை பயன்படுத்தி தட்டச்சு, கணினி பயின்று தனித்திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் தலைமைஆசிரியர்கள் அறிவுரை வழங்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
x
தினத்தந்தி 10 April 2019 10:30 PM GMT (Updated: 10 April 2019 7:23 PM GMT)

கோடைவிடுமுறையை மாணவர்கள் பயனுள்ள முறையில் கழித்திடும் வகையில் தட்டச்சு, கணினி, ‘அபாகஸ்’ போன்றவற்றை கற்று தனித்திறன்களை வளர்த்துக்கொள்ள அவர்களை தலைமைஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை, 

2018-2019-ம் கல்வியாண்டில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 3-ம் பருவத் தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. ஆனால் பள்ளி வேலைநாள் நாளை (வெள்ளிக்கிழமை) வரை உள்ளது. எனவே இன்றும் நாளையும் என 2 நாட்களில் மாணவர்கள் கோடை விடுமுறைகளை பாதுகாப்பான, ஆக்கப்பூர்வமான முறையில் கழிக்க வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு கீழ்கண்ட அறிவுரைகள் வழங்க வேண்டும் என்றும் அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது:-

மாணவர்கள் கோடை விடுமுறை நாட்களில் தினமும் நாளிதழ்களை வாசித்து அவற்றில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு, அறிவியல், கலை ஆகிய செய்திகள் சார்ந்து செய்திக் குறிப்பெடுத்து அடுத்த கல்வியாண்டின் முதல் நாளில் ஆசிரியர்களிடம் காண்பித்து கையொப்பம் பெற வேண்டும்.

அரசு பொது நூலகத்தில் அனைத்து மாணவர்களும் உறுப்பினராக சேர்ந்துள்ள நிலையில் அரசு விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில் அருகில் உள்ள அரசு பொது நூலகத்திற்குச் சென்று புத்தகங்களைப் படித்து அதில் இருந்து குறிப்பெடுத்து பள்ளி திறக்கும் நாளில் ஆசிரியர்களிடம் காண்பித்து கையொப்பம் பெற வேண்டும் என அறிவுறுத்த வேண்டும்.

கோடையில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் பெற்றோர் துணையின்றி வெளியில் எங்கும் செல்லக் கூடாது. நீர் நிலை பகுதிகளுக்கு பெற்றோர் துணையின்றி கண்டிப்பாக செல்லக் கூடாது. ஓட்டுனர் உரிமம் இன்றி இருசக்கர வாகனங்கள் ஓட்டக் கூடாது. அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து ஆக்கப்பூர்வமாக கோடை விடுமுறையைப் பயன்படுத்த வேண்டும். காலை, மாலை நேரங்களில் விளையாட்டில் ஈடுபட வேண்டும் என அறிவுரைகள் வழங்க வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளில் தற்போது கணினி வசதி இருப்பதால், அவற்றைப் பயன்படுத்த ஏதுவாக கோடை விடுமுறையில் மாணவர்கள் தட்டச்சு, கணினி வகுப்புகளுக்கு சென்று அடிப்படை பயிற்சியை பெற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்கள் தனித்திறன்களை வளர்த்துக்கொள்ள அவர்கள் விரும்பும் யோகா, ‘அபாகஸ்’, இசை, பரதநாட்டியம், ஓவியம், தையல், கைசிலம்பம், கபடி, நீச்சல் போன்றவற்றை பாதுகாப்புடன் கற்றுக்கொள்ளலாம் என ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

மாணவர்கள் தங்கள் வீட்டில் நூலகம் தொடங்கி அவற்றில் இவ்வருடம் பயின்ற பாடநூல்களை வைக்க வேண்டும். மேலும், கடந்த வருடங்களில் படித்த பாடநூல்களையும் நூலகத்தில் வைக்கவும் அறிவுரைகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story