தஞ்சையில் ரூ.5 கோடியில் அய்யன் குளம் சீரமைக்கும் பணி


தஞ்சையில் ரூ.5 கோடியில் அய்யன் குளம் சீரமைக்கும் பணி
x
தினத்தந்தி 10 April 2019 10:45 PM GMT (Updated: 10 April 2019 7:40 PM GMT)

தஞ்சையில் ரூ.5 கோடியில் அய்யன் குளத்தை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சையை ஆண்ட மன்னர்கள், தொலைநோக்கு பார்வையுடன் நீர் மேலாண்மைக்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கினார்கள். இன்றைக்கும் அவை கடமையாற்ற காத்திருக்கின்றன. இவற்றின் பாதாள வழித்தடங்கள் தற்போதும் உயிர்ப்புடன் தான் உள்ளது. ஆனாலும் ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் நீர் கட்டமைப்புகள் முடங்கி கிடக்கின்றன.

தஞ்சை பெரியகோவிலுக்கு வடக்கே அமைந்துள்ள சிவகங்கை பூங்காவில் சிவகங்கை குளம் உள்ளது. இந்த குளம் 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. தஞ்சை நகரில் உள்ள குளங்களில் இந்த ஒரு குளம் மட்டுமே பராமரிப்பில் உள்ளது. காரணம் தண்ணீரின் அருமை கருதி அல்ல, சிவகங்கை பூங்காவின் உள்ளே இந்த குளம் இருப்பதால் படகுசவாரி மூலம் மாநகராட்சிக்கு வருமானம் வருவதால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சை நகரில் உள்ள மற்ற குளங்கள் எல்லாம் எந்த பராமரிப்பும் இன்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றன. தஞ்சையின் தென்மேற்கு பகுதியில் பெய்யும் மழைநீரை செவப்பன்ஏரிக்கு வாரிகள் மூலம் கொண்டு வந்து, நீரை சேமித்து சேற்றை அடியில் தங்கவிட்டு தெளிந்த நீரை மட்டும் குழாய்களின் வழியே சிவகங்கை குளத்திற்கு அனுப்பி அங்குள்ள கிணறுகளில் வண்டல் மண்ணை படியவிட்டு தெளிந்த நீரை சுடுமண் குழாய் வழியாக மேலவீதியில் உள்ள அய்யன் குளத்திற்கு கொண்டு சென்றனர்.

ஆனால் நாளடைவில் வீடுகளும், கட்டிடங்களும் கட்டப்பட்டதால் நீர் கொண்டு செல்லப்பட்ட குழாய்கள் அடைக்கப்பட்டன. இதனால் அய்யன் குளத்துக்கு நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தஞ்சையை ஆண்ட விஜயரெகுநாத நாயக்கர் மன்னர் ஆட்சிகாலத்தின்போது வெட்டப்பட்ட அய்யன் குளத்தை சீரமைத்து நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்தநிலையில் தஞ்சை மாநகராட்சி ‘ஸ்மார்ட்’ சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி தஞ்சை மேலவீதியில் உள்ள அய்யன் குளத்தை சீரமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து குளத்தை சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. குளத்தில் 4 புறமும் உள்ள படிக்கட்டுகள் சீரமைக்கப்பட்டு குளத்தை சுற்றிலும் நடைபாதை அமைக்கப்பட உள்ளது.

குளத்தின் மையப்பகுதியில் உள்ள தூணில் விநாயகர் சிலை உள்ளது. இந்த விநாயகரை மக்கள் சென்று தரிசனம் செய்யும் வகையில் நடைபாதை அமைக்கப்படுகிறது. இந்த பணி இன்னும் சில மாதங்களில் முடிவடையும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல தஞ்சை நகரில் உள்ள சாமந்தான்குளம் உள்ளிட்ட குளங்களையும் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story