ஆதம்பாக்கத்தில் ஓய்வுபெற்ற கப்பல் படை அதிகாரி வீட்டில் திருட்டு
ஆதம்பாக்கத்தில், ஓய்வுபெற்ற கப்பல் படை அதிகாரி வீட்டில் நகை, பணம், விலை உயர்ந்த கேமராக்களை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் நிலமங்கை நகரைச் சேர்ந்தவர் ரிச்சர்டு (வயது 62). இவர், கப்பல் படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். நேற்று காலை தூங்கி எழுந்த ரிச்சர்டு, வீட்டின் பின்புறம் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் அறையில் இருந்த பீரோவை சோதனை செய்தபோது, அதில் இருந்த 3 பவுன் தங்க நகை, விலை உயர்ந்த 2 கேமராக்கள், 6 கேமரா லென்சுகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.
இதுபற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை அண்ணாநகர் மேற்கு, ஜெ.பிளாக்கை சேர்ந்தவர் ஜெகன்மோகன்(68). நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள படுக்கை அறையின் கதவை பூட்டிக்கொண்டு தூங்கி விட்டார். நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார்.
மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 4 பவுன் நகை, ஒரு செல்போன், ரூ.500 ஆகியவற்றை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து திருமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து திருடிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.