காதல் தகராறில் வாலிபர் தற்கொலை: துக்கம் தாங்காமல் காதலியும் சாவு, 3–வது மாடியில் இருந்து குதித்தார்
காதல் தகராறில் வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதனால் மனம் உடைந்த காதலி, 3–வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவொற்றியூர்,
சென்னை ராயபுரம் பனைமரத்தொட்டி பி.பிளாக் பகுதியில் வசித்து வருபவர் தேசிங்கு. மீனவரான இவருடைய மகன் பிரேம்நாத் (வயது 20). இதேபோல் காசிமேடு புது காமராஜர் தெரு, 5–வது குறுக்கு தெருவில் வசிப்பவர் சமீம். இவருடைய மகள் சந்தியா என்ற ஆயிஷா (19). அருகில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–2 தேர்வு எழுதி உள்ளார்.
பிரேம்நாத்தும், ஆயிஷாவும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் செல்போனிலும், நேரிலும் பேசி பழகி காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் பிரேம்நாத், ஆயிஷாவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி அவரது பெற்றோரிடம் கேட்டார். ஆனால் அதற்கு ஆயிஷாவின் பெற்றோர் மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து காதலி ஆயிஷாவிடம் பிரேம்நாத் கூறினார். அதற்கு அவர், ‘‘நீ என்னை உண்மையாக காதலிக்கிறாயா?’’ என்றுகேட்டு சண்டை போட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில், ‘‘இனி நாம் இருவரும் பிரிந்து விடலாம்’’ என்று ஆயிஷா கூறினார்.
இதனால் மனமுடைந்த பிரேம்நாத், நேராக தனது வீட்டுக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். கழுத்தில் கயிறை மாற்றிக்கொண்டு, ‘‘நான் உன்னை உண்மையாக காதலிக்கிறேன். நீ என்னை நம்ப மறுக்கிறாய். நான் இந்த உலகத்தை விட்டு செல்கிறேன்’’ என்று வீடியோ எடுத்து அதை தனது காதலிக்கு ‘வாட்ஸ்–அப்’பில் தகவல் அனுப்பினார்..
அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆயிஷா, பதறியடித்தபடி மீண்டும் தனது காதலனுக்கு வீடியோ காலில் தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்போன் ‘‘சுவிட்ச் ஆப்’’ செய்யப்பட்டு இருந்தது.
இதற்கிடையில் பிரேம்நாத், அதே கயிற்றில் தூக்குப்போட்டு கொண்டார். அறைக்குள் சென்ற மகன் நீண்டநேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், கதவை தட்டினர். ஆனால் அவர் கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர்.
அப்போது பிரேம்நாத், தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், பிரேம்நாத் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.
மறுநாள் காலை தனது காதலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததை அறிந்த ஆயிஷா, தன்னால்தான் தன் காதலன் தற்கொலை செய்து கொண்டான் என நினைத்து மனம் உடைந்தார். காதலன் இறந்த துக்கம் தாங்காமல் அவர், வீட்டின் 3–வது மாடியில் இருந்து கீழே குதித்து விட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆயிஷா பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காதலன் இறந்த துக்கம் தாங்காமல், காதலியும் 3–வது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.