பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்விற்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்


பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்விற்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 10 April 2019 11:00 PM GMT (Updated: 10 April 2019 8:02 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூர்,

வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ள பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 அரசு சிறப்புத் துணைத் தேர்வு எழுத, ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத்தேர்வில் விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கவுள்ள தனித்தேர்வர்கள் இது தொடர்பான விவரங்களை வருகிற 12-ந்தேதிக்குள் பெரம்பலூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட ஆண்கள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பெண்கள் பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பூர் கல்வி மாவட்ட தனித்தேர்வர்களில் ஆண்கள் குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பெண்கள் குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கவுள்ள தனித்தேர்வர்கள் தங்களது 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று மாவட்டக் கல்வி அலுவலர் வாயிலாக பெற்ற இணைச்சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஓராண்டு இடைவெளியும் 1.6.2019 அன்று 15½ வயதும் பூர்த்தி அடைந்தவர்கள் மட்டுமே நேரடித் தனித்தேர்வர்களாக தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.

பழைய பாடத்திட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வெழுதி தேர்ச்சி பெறாதோர் தேர்ச்சி பெறாத பாடங்களில் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத ஜூன் மாதம் நடைபெறவுள்ள சிறப்புத் துணைத் தேர்வே இறுதி வாய்ப்பாகும். புதிய பாடத்திட்டத்தின்படி பகுதி 1 மற்றும் 2 மொழிப் பாடங்களுடன் 1) வரலாறு, பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், 2) பொருளியல், அரசியல் அறிவியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், 3) பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், அறிவியல் மற்றும் இந்தியக் கலாசாரம், 4) பொருளியல் வணிகவியல், கணக்குப் பதிவியல், சிறப்பு மொழி (தமிழ்), 5) பொருளியல் வணிகவியல், கணக்குப் பதிவியல், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியல் ஆகிய 5 பாடத் தொகுப்புகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.

ஏற்கனவே பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வெழுதி தோல்வியுற்ற பாடங்களில் தேர்வெழுதும் தேர்வர்கள். ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50 வீதம் தேர்வுக் கட்டணமும், அதனுடன் இதரக் கட்டணமாக ரூ.35-ம் செலுத்த வேண்டும். ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூ.50. பிளஸ்-1 அல்லது பிளஸ்-2 தேர்வினை முதன் முறையாக எழுதவுள்ள தனித்தேர்வர்கள் தேர்வுக்கட்டணம் ரூ.150 இதரக்கட்டணம் ரூ.35-ம் மொத்தம் ரூ.185 மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூ.50-ஐ சேவை மையத்தில் ரொக்கமாக செலுத்த வேண்டும். பார்வையற்றோருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகளைப் பெற விரும்பினால் தங்களது விண்ணப்பத்துடன் தனியே சலுகை கோரும் கடிதத்தையும் உரிய மருத்துவச் சான்றிதழ்களை கட்டாயமாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு வழங்கப்படும் ஒப்புகைச்சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை கொண்டு பதிவிறக்கம் செய்ய இயலும் என்பதால் ஒப்புகைச் சீட்டினை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். நாளை (வெள்ளிக்கிழமை) விண்ணப்பிக்கத் தவறும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் வருகிற 15,16-ந்தேதிகளில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வுகள் சார்ந்த விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story