ஜி.எஸ்.டி. வரியை அறிமுகப்படுத்தி உள்ளூர் தொழில்களை அழித்தவர் மோடி உதயநிதி ஸ்டாலின் பேச்சு


ஜி.எஸ்.டி. வரியை அறிமுகப்படுத்தி உள்ளூர் தொழில்களை அழித்தவர் மோடி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 11 April 2019 4:45 AM IST (Updated: 11 April 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி.வரியை அறிமுகப்படுத்தி உள்ளூர் தொழில்களை அழித்தவர் மோடி என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே திருச்சி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதிரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், மோடி தலைமையிலான மத்திய அரசையும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான மாநில அரசையும் மாற்றும் நாள் தான் ஏப்ரல் 18. கருப்பு பணத்தை ஒழிக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்ததாக கூறினார்கள். வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் போடுவோம் என்றார்கள். ஆனால் அவர்கள் எதையும் செய்யவில்லை. புதிய இந்தியா பிறந்ததாக தொடர்ந்து மோடி சொல்லிக் கொண்டே இருந்தார். ஏதாவது பிறந்ததா, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 150 பேர் இறந்ததுதான் நடந்தது. மோடியின் வெளிநாட்டு பயண செலவு மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி, அவர் அணியும் சட்டையின் விலை ரூ.15 லட்சம். ஒரு கோடி வேலைவாய்ப்பைத் தருவதாக கூறினார்கள். ஆனால், ஜி.எஸ்.டி. வரியை அறிமுகப்படுத்தி உள்ளூர் தொழில்களை அழித்து பலரையும் வேலை இழக்க செய்ததுதான் மிச்சம்.

95 வயது வரை பொது நலனுக்காக உழைத்த தலைவர் கருணாநிதி. 5 முறை முதல்-அமைச்சராக இருந்தவர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது டாக்டர்கள் எங்களை அழைத்து இன்னும் சில மணி நேரங்களில் அவர் உயிர் பிரிய போகிறது என்றார்கள். கருணாநிதியின் கடைசி ஆசையை நிறைவேற்ற அந்த நேரத்திலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சென்று சந்தித்தார், ஸ்டாலின். ஆனால், மெரினாவில் இடம் தர முடியாது என மறுத்தனர். விடிய விடிய நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று முடிவு வந்தது. இறந்த பிறகும் போராடி ஜெயித்தவர் கருணாநிதி. அவருக்கு செய்யும் இறுதி அஞ்சலி, தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 22 சட்டமன்ற இடை தேர்தலில் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்வது தான் என்று கூறினார்.

கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் திருநாவுக்கரசரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கஜா புயல் தமிழ்நாட்டினை தாக்கி வீடு, உடைமைகளை இழந்த மக்களை பார்க்காத மோடி இப்போது தேர்தல் வந்தவுடன் தமிழ்நாட்டில் பலமுறை முகாமிட்டுள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிடாமல், ஹெலிகாப்டரில் சுற்றி திரிந்தார். நான் இந்த பகுதியில் கஜா புயல் தாக்கிய போது மக்களை நேரில் சென்று பார்வையிட்டு நிவாரணம் வழங்கியுள்ளேன். மோடி தலைமையில் இயங்கும் பாரதீய ஜனதா அரசு இந்தியாவிற்கு எந்த நன்மையும் செய்யவில்லை. நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருகின்றது. காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் விவசாய கடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து என பல நல்ல திட்டங்கள் உள்ளது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூட்டுறவு வங்கியில் 5 பவுன் வரை விவசாய நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருக்கிறார் என்று கூறினார். 

Next Story