தொண்டு நிறுவனத்துக்காக ரூ.31½ லட்சம் வைப்புத்தொகை பெற்று மோசடி - தம்பதி கைது
தொண்டு நிறுவனத்துக்காக ரூ.31½ லட்சம் வைப்புத்தொகை பெற்று மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்,
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் டேவிட் பீட்டர் (வயது 45). இவருடைய மனைவி பாக்கியலட்சுமி (36). இவர்கள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பண்ணைக்காட்டில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கினர். மேலும் அந்த நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து ரூ.2 லட்சம் நிரந்தர வைப்புத்தொகை செலுத்தினால் மாதம் ரூ.12 ஆயிரத்து 500 வட்டியாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிப்பு செய்தனர்.
இதனை உண்மை என நம்பி பண்ணைக்காடு மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 14 பேர் உறுப்பினராக சேர விருப்பம் தெரிவித்தனர். அவர்களிடம் உறுப்பினர் கட்டணமாக தலா ரூ.25 ஆயிரம், நிரந்தர வைப்புத்தொகையாக தலா ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.31 லட்சத்து 50 ஆயிரத்தை தம்பதியினர் பெற்றதாக கூறப்படுகிறது.
பின்னர் 4 மாதங்கள் அந்த உறுப்பினர்களுக்கு தலா ரூ.12 ஆயிரத்து 500 வட்டியாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை. இதுகுறித்து கேட்பதற்காக 14 உறுப்பினர்களும் அந்த தொண்டு நிறுவனத்துக்கு சென்றனர். அப்போது தான், டேவிட் பீட்டரும், அவருடைய மனைவியும் தொண்டு நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவானதும், தங்களிடம் பணம் பெற்றும் மோசடி செய்ததும் அவர்களுக்கு தெரியவந்தது.
இதுகுறித்து திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அவர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் மதுரையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story