வேன்-மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதல், கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி


வேன்-மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதல், கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி
x
தினத்தந்தி 11 April 2019 4:00 AM IST (Updated: 11 April 2019 2:11 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

ஒட்டன்சத்திரம்,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தேவத்தூரை சேர்ந்தவர் லட்சுமிபதிராஜ் (வயது 19). பட்டிவீரன்பட்டி அருகே உள்ள தேவரப்பன்பட்டியை சேர்ந்தவர் கேசவபாண்டியன் (19). தேனி அருகே உள்ள சிந்துவம்பட்டியை சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டி (19). இவர் கள் 3 பேரும், ஒட்டன்சத்திரம்-வேடசந்தூர் சாலையில் நவாமரத்துப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தனர்.

லட்சுமிபதிராஜ் கணிப்பொறி அறிவியல் முதலாமாண்டும், கேசவபாண்டியன் 2-ம் ஆண்டு கணிதவியலும், அலெக்ஸ்பாண்டி 2-ம் ஆண்டு வேதியியலும் படித்தனர். நண்பர்களான இவர்கள், அதே பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தனர்.நேற்று இவர்கள், கல்லூரி முடிந்ததும் ஒட்டன்சத்திரம் செல்ல முடிவு செய்தனர்.

இதற்காக, ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேரும் ஒட்டன்சத்திரம் நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிளை அலெக்பாண்டி ஓட்டினார். கேசவபாண்டியன், லட்சுமிபதிராஜ் ஆகியோர் பின்னால் அமர்ந்து இருந்தனர்.

ஒட்டன்சத்திரம்-வேடசந்தூர் சாலையில், திப்பம்பட்டி பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற அரசு பஸ்சை அவர்கள் முந்த முயன்றனர். அந்த சமயத்தில், ஒட்டன்சத்திரத்தில் இருந்து வேடசந்தூர் நோக்கி எதிரே வந்த வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் அலெக்ஸ்பாண்டி, கேசவபாண்டியன், லட்சுமிபதிராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக திண்டுக்கல் அருகே உள்ள நரசிங்கபுரத்தை சேர்ந்த வேன் டிரைவர் கார்த்திகேயன் (26) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
1 More update

Next Story