கருணாநிதி சமாதிக்கு நிலம் கொடுத்த விவகாரத்தில், உண்மையை மறைத்து மு.க.ஸ்டாலின் பொய் பேசுகிறார்- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
கருணாநிதி சமாதி விவகாரத்தில் உண்மையை மறைத்து மு.க.ஸ்டாலின் பொய் பேசி வருகிறார் என்று உளுந்தூர்பேட்டையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
உளுந்தூர்பேட்டை,
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் டாக்டர் கோவிந்தசாமி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று விருத்தாசலம் பாலக்கரையில் திறந்த வேனில் இருந்தபடி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மோடி தலைமையில் மத்தியில் நல்லாட்சி மலர வேண்டும். நமது கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ள டாக்டர் கோவிந்தசாமிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து, அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
வாக்கு வங்கிகள் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அமைத்துள்ள மெகா கூட்டணிதான் நமது கூட்டணியாகும். இதை பார்த்து மு.க.ஸ்டாலின் அரண்டு போய் உள்ளார். நமது கூட்டணி கொள்கை உள்ளதாகும். ஆனால் அவர்களது கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி.
நாட்டு பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. நமது மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு தகுதி வாய்ந்த பிரதமராக நரேந்திர மோடி உள்ளார். எதிர்க்கட்சிகள் இன்னும் தங்களது பிரதமர் வேட்பாளர் யார்? என்று அறிவிக்கவில்லை. ஆனால் மு.க.ஸ்டாலின் மட்டும் ராகுல் காந்தி தான் பிரதமர் என்று அறிவித்துள்ளார். ஆனால் இதை மற்ற கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் கம்யூனிஸ்டுகள் கேரளாவில் எதிர்த்து நிற்கிறார்கள். இவர்களால் எப்படி நிலையான ஆட்சியை தர முடியும்.
நாம் மட்டும் தான் பிரதமர் வேட்பாளர் யார்? என்பதை அறிவித்து முன்னிலை படுத்தி உள்ளோம். ஆனால் எதிர்க்கட்சிகள் தேர்தல் முடிந்த பின்னர் பிரதமர் யார்? என்பதை தேர்வு செய்வார்களாம். பிரதமர் யார் என்பதை முன்நிறுத்தாத இவர்களுக்கு யார் ஓட்டு போடுவார்கள்?. பிரதமர் வேட்பாளரை அறிவிக்காத கட்சிகளால் நாட்டுக்கு எப்படி நிலையான ஆட்சியை கொடுக்க முடியும்?.
நமது நாட்டிற்கு அண்டை நாடுகளின் அச்சுறுத்தல் இருந்து வருகிற, இந்த தருணத்தில் தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. எனவே நாட்டை ஆள வலிமையான பிரதமர் தேவை. சமீபத்தில் புலவாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் நமது வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அனைவருக்கும் தெரியும். தீவிரவாதிகளுக்கு சவால் விடும் வகையில் அவர்களை வேரோடு அழித்தவர் மோடி.
நம் ராணுவ வீரர்களை கொன்ற தீவிரவாதிகளை அழித்த பெருமை பிரதமர் மோடியையே சாரும். தமிழகத்தை சேர்ந்த விமானப்படை வீரர் அபிநந்தன் எதிரிநாட்டிடம் சிக்கிக்கொண்டார். அவரை பத்திரமாக மீட்டுக்கொண்டு வந்த பெருமையும் பிரதமர் மோடியையே சேரும்.
நமது கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு தேவையான அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் பல்வேறு அம்சங்கள் உள்ளது.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசும் தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. 3 ஆயிரம் ஏரிகளை ஆழப்படுத்தியுள்ளோம். விரைவில் அனைத்து ஏரிகளும் தூர்வாரப்படும். மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமிக்க ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அதற்கான திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம்.
சென்னை அருகே மிகப்பெரிய உணவு பூங்கா அமைக்கப்பட உள்ளது. இங்கு விவசாயிகள் ஒரு மாதம் வரையில் காய்கறிகளை இலவசமாக சேமித்து வைத்து, விலை கிடைக்கும் போது விற்பனை செய்யலாம். விவசாயிகளின் உப தொழிலை ஊக்குவிப்பதற்காக கள்ளக்குறிச்சி அருகே 900 கோடி ரூபாயில் கால்நடை பூங்கா அமைக்க உள்ளோம்.
இந்தியாவிலேயே தடையில்லா மின்சாரம் வழங்கும் ஒரே அரசு நமது அரசு தான். தைப்பொங்கலுக்கு அனைத்து குடும்பத்திற்கும் ஆயிரம் ரூபாய் வழங்கினோம். மேலும் விவசாய தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்போவதாக அறிவித்தோம். இதுபற்றி மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்ததால், அந்த தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவடைந்த பின்னர் அனைவருக்கும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு குழந்தைக்கு ராமச்சந்திரன் என்று பெயரிட்டார். இந்த பிரசாரத்தின் போது அமைச்சர் எம்.சி. சம்பத், அ.தி.மு.க. நகர செயலாளர் சந்திரகுமார், முன்னாள் நகரசபை தலைவர் அருளழகன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் வக்கீல் விஜயகுமார், முன்னாள் நகரசபை உறுப்பினர் கென்னடி, சதீஷ்குமார், மாவட்ட பேரவை செயலாளர் என்ஜினீயர் ரவிச்சந்திரன், பா.ம.க. மாவட்ட செயலாளர் சுரேஷ், நகர செயலாளர்கள் முத்துக்குமார், நாகராஜ், சரவணன், முன்னாள் நகரசபை தலைவர் வ.க.முருகன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் முதனை செல்வராஜ், முன்னாள் நகர செயலாளர் சிங்காரவேல், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, ஆனந்தகோபால், ரமேஷ், தமிழ் மாநில காங்கிரஸ் அசோக்குமார், பா.ஜனதா கட்சி வக்கீல் ராஜேந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வடிவேல் ராவணனை ஆதரித்து உளுந்தூர்பேட்டையில் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி பேசியதாவது-
தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பொய் அறிக்கை, வெற்று அறிக்கையாகும். அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை நிறைவேற்றியதாக சரித்திரமே கிடையாது. அவர்களது கூட்டணியில் உள்ள கட்சிகள் கொள்கை இல்லாத கட்சிகள் ஆகும். இவர்கள் ஒன்று சேர்ந்து எப்படி, மத்தியில் நிலையான ஆட்சியை தரமுடியும்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி இறந்த போது, அண்ணா நினைவிடத்தின் அருகே வைக்க இடம் கேட்டார்கள். ஆனால் ஜெயலலிதாவுக்கு நாங்கள் கட்டி வரும் நினைவிடத்தை தடுக்கும் விதமாக பொது நல வழக்கு போடப்பட்டு இருந்தது. வழக்கு நடந்து வருவதால் அங்கு கருணாநிதிக்கு சமாதி வைக்க இடம் தர இயலாது, என்று கூறி காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் கொடுத்தோம். ஆனால் மு.க.ஸ்டாலின் 6 அடி இடம் கூட தரவில்லை என்கிறார். இதன் பின்னர், அவர்கள் போட்டிருந்த வழக்குகளை இரவோடு இரவாக வாபஸ் பெற்று விட்டு, அங்கு இடத்தை பெற்றார்கள்.
இவ்வாறு நாட்டு மக்களிடம் உண்மையை மறைத்து, பொய் பேசி மக்களிடம் அனுதாபம் பெற முயற்சிக்கிறார்.
இதே தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது காமராஜர் இறந்தார். அப்போது அவர் முதல்-அமைச்சராக இல்லை என்று கூறி அவரை கடற்கரையில் வைப்பதற்கு கருணாநிதி மறுத்துவிட்டார். இதேபோல் ஜானகிஅம்மாள் இறந்த போதும் எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே சமாதி வைப்பதற்கு மறுத்துவிட்டார்.
நாங்கள் தலைவரை மதிப்பவர்கள், ஆனால் மு.க.ஸ்டாலின் அவ்வாறு இல்லை. கருணாநிதி உயிரோடு இருந்த போது அவருக்கு எந்த பதவியும் கொடுக்கவில்லை.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சியை கவிழ்க்கவும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் 35 ஆயிரம் போராட்டங்களை மு.க.ஸ்டாலின் தூண்டிவிட்டார். நாங்கள் போராட்டக்காரர்களை அழைத்து பேசி அவர்களது கோரிக்கையை நிறைவேற்றினோம். எப்படியாவது ஆட்சியை கவிழ்த்து, கட்சியை கலைக்க வேண்டும் என்பது தான் அவர்களது எண்ணம். அவருடைய இந்த கனவு பலிக்காது. அதேபோல் இந்த தேர்தலோடு பரிசுபெட்டியும் காணாமல் போய்விடும்.
மு.க.ஸ்டாலினால் ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது. மதுரைக்கு செல்லாமல் இருந்த மு.க.ஸ்டாலின் ஒரு வாரத்திற்கு முன்பு அங்கு சென்று வந்தார். இதிலிருந்து அவருக்கு தெரியவில்லையா, சட்டம்-ஒழுங்கு சரியாக தான் உள்ளது என்று.
உங்கள் கட்சியினர் ஒழுங்காக இருந்தாலே பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். பொள்ளாச்சி சம்பவம் குறித்து ஸ்டாலின் பேசி வருகிறார். அந்த சம்பவத்தை கண்டு பிடித்து, காரணமான குற்றவாளிகளை சிறையில் அடைத்தது நாங்கள் தான். யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது.
மத்தியில் நிலையான திறமையான பிரதமர் வருவதற்கு பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணனை மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம், குமரகுரு எம்.எல்.ஏ., அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் செந்தில்வேல், மணிராஜ், நகர செயலாளர் துரை, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சாய்ராம், அம்மா பேரவை நிர்வாகி நமச்சிவாயம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் சுதீசுக்கு முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், நாட்டின் பாதுகாப்பு முக்கியம். இதற்கு திறமையான, வலிமையான பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும். இதற்கு நீங்கள் முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அ.தி.மு.க. தலைமையிலான நமது கூட்டணியில் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் வரும் போது தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும். போதுமான நிதிகள் பெற்றுத்தரப்படும்.
கள்ளக்குறிச்சி தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, நாடாளுமன்றத்தில் குரல் ஒலித்திட நீங்கள் முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இந்த பகுதி மக்களின் 20 ஆண்டுகால கோரிக்கையான கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்துள்ளோம். தேர்தலுக்கு பிறகு கள்ளக்குறிச்சி மாவட்டம் செயல்பட தொடங்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் அ.தி.மு.க. நகர செயலாளர் பாபு, முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல்பாபு, ஒன்றிய செயலாளர் ராஜசேகர், மாவட்ட அவைத்தலைவர் பச்சையாபிள்ளை, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், தியாகதுருகம் நகர செயலாளர் ஷ்யாம்சுந்தர், ஒன்றிய அவைத்தலைவர் வைத்தியலிங்கம், அ.தி.மு.க. பாசறை நகர செயலாளர் கிருஷ்ணராஜ் மற்றும் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன், துணை செயலாளர் கருணாகரன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story