மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொள்கை முடிவு, துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை - தூத்துக்குடி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு + "||" + Policy decision in the Sterlite affair, By firing Action on police

ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொள்கை முடிவு, துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை - தூத்துக்குடி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொள்கை முடிவு, துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை - தூத்துக்குடி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கொள்கை முடிவு எடுத்து, துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடியில் நடந்த பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தூத்துக்குடி,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் நேற்று காலை புதுக்கோட்டை அருகே உள்ள மங்களகிரி விலக்கு பகுதியில் நடந்தது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்கிறது. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக எனது தங்கை கனிமொழி போட்டியிடுகிறார். அவருக்கும், விளாத்திகுளம் தொகுதி வேட்பாளர் ஜெயக்குமாருக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

கடந்த 20-ந் தேதி தேர்தல் பிரசாரத்தை திருவாரூரில் தொடங்கி, தலைவர் கருணாநிதி மகள் போட்டியிடும் தூத்துக்குடிக்கு வந்து உள்ளேன். அனைத்து தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் யார் போட்டியிட்டாலும், அவர்கள் அத்தனை பேரும் கலைஞரின் பிள்ளைகள்தான் என்று பேசி வருகிறேன். இன்று கலைஞரின் பிள்ளையே தூத்துக்குடியில் போட்டியிடுகிறார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக கனிமொழி நிறுத்தப்பட்டு இருக்கிறார் என்று சொல்வதை விட உங்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறார். அவர் போட்டியிடுகிறார் என்றால், தலைவர் கருணாநிதியே போட்டியிடுகிறார். ஏன் நானே போட்டியிடுகிறேன். அதனை உணர்ந்து நீங்கள் ஆதரவு தர வேண்டும்.

எனது தங்கை, கவிஞராக, எழுத்தாளராக, பத்திரிகையாளராக, பேச்சாளராக படிப்படியாக ஒவ்வொரு துறையிலும் தனக்கென ஒரு முத்திரை பதித்து சிறப்புக்குரிய இடத்தை பிடித்து வளர்ந்து உள்ளார். சமூக போராளியாகவும் உள்ளார். ‘பார்லிமெண்ட் டைகர்‘ என்ற பட்டத்தையும் பெற்று உள்ளார். அவர் தூத்துக்குடியில் உங்களுக்கு டைகராக விளங்குவார்.

மற்ற தொகுதிகளின் மக்களைவிட தூத்துக்குடி தொகுதி மக்களுக்கு முக்கிய கடமை உள்ளது. தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் 13 பேரை சுட்டுக் கொலை செய்து இருக்க கூடிய அ.தி.மு.க, பா.ஜனதா கூட்டணிக்கு தக்க தண்டனை தரக்கூடிய சூழ்நிலை வருகிற 18-ந் தேதி உங்களுக்கு கிடைத்து உள்ளது. நச்சு ஆலையாக மாறிவிட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் அமைதியான வழியில் போராடினர். 100 நாட்களாக போராட்டம் நடந்தது. 100-வது நாளில் கலெக்டரிடம் மனு கொடுக்க சென்றனர். அவர்களை கலெக்டர் அழைத்து பேசவில்லை.

நச்சு ஆலையை விரிவாக்கம் செய்கிறார்கள், அதனை செய்யக்கூடாது என்பதுதான் அந்த மக்களின் கோரிக்கை. மக்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை யாரும் எதிர்க்கக்கூடாது, யாரும் எதிராக செயல்படக்கூடாது, எதிர்த்தால் சுட்டுக் கொல்வோம் என்று அச்சுறுத்துவதற்காகத்தான் இந்த துப்பாக்கி சூட்டை அரசு நடத்தி இருக்கிறது. இந்த துப்பாக்கி சூட்டை நடத்தி உள்ள எடப்பாடி அரசு கொலைகார அரசாக இருப்பதால், அதனை தூக்கி எறிய வருகிற 18-ந் தேதியை நீங்கள் பயன்படுத்திட வேண்டும்.

குடும்பம், குடும்பமாக, குழந்தைகளுடன் வந்தவர்களை சுட்டுக் கொன்றார்கள். பொதுவாக கூட்டத்தை கலைக்க வானத்தை நோக்கி சுடுவார்கள். அந்த முறையை கடைபிடிக்காமல் 13 பேரை சுட்டு கொன்று உள்ளனர். கலைந்து ஓடிய மக்களையும் சுட்டு உள்ளனர். துரத்தி துரத்தி மக்களை சுடுவதற்கு உத்தரவிட்டது யார்?. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியா?, தலைமை செயலாளர் கிரிஜாவா?, பிரதமர் மோடியா? என்ற கேள்விதான் எழுந்து கொண்டு இருக்கிறது. எடப்பாடி வாங்கிய கூலிக்கு செய்த கொலைதான் இது. மோடி வாங்கிய நன்கொடைக்கு செய்த கொலைதான் இந்த சம்பவம்.

இப்படிப்பட்ட கொடுமையான சம்பவம் நடந்த மறுநாள் தூத்துக்குடிக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினேன். என் வாழ்நாளில் இப்படி ஒருகாட்சியை நான் பார்த்தது இல்லை. ஆனால் முதல்-அமைச்சர் ஆறுதல் கூறவில்லை. பிரதமர் மோடி ஒரு இரங்கல் செய்திகூட வெளியிடவில்லை. இதனால் அவரை பாசிச மனப்பான்மை கொண்ட பிரதமர் என்று கூறுகிறோம்.

தூத்துக்குடி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக தமிழிசை போட்டியிடுகிறார். அவர் ஒருமுறை விமானத்தில் வந்த போது, பாசிச மோடி ஆட்சி ஒழிக என்று மாணவி சோபியா கூறி உள்ளார். இதனால் தகராறு செய்து, அந்த மாணவியை கைது செய்ய காரணமாக இருந்தவர் தமிழிசை. அந்த மாணவி சொன்னதை நாங்கள் இன்னும் நினைவில் வைத்து உள்ளோம். பாசிச பா.ஜனதா பிரபலமாகி விட்டது. மோடிக்கு எதிராக ஒரு சுலோகம் கூற வேண்டும் என்று யோசித்துக் கொண்டு இருந்த போது, அந்த வார்த்தை கிடைக்க காரணமாக இருந்தவர் தமிழிசை. அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழிசை போட்டியிடுவதற்கு தூத்துக்குடி தொகுதிதான் கிடைத்ததா?. இங்கு தானே ஸ்டெர்லைட் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, தீப்பெட்டி தொழிலாளர் பிரச்சினை உள்ளது. இதனை பற்றி செவிசாய்க்காத, சிந்தித்து பார்க்காத தமிழிசை எந்த தைரியத்தில் தூத்துக்குடியில் போட்டியிடுகிறார். தோற்பதற்காகவே வந்து இருக்கிறீர்களே. டெபாசிட் இழந்து போகும் சூழலில் இந்த தொகுதியை தேர்ந்தெடுத்து உள்ளர்களா?. ஆகையால் முதலிலேயே அவருக்கு அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் கட்சிக்குள்ளேயே சதி செய்து, அவரை இங்கு நிறுத்தி இருக்கிறார்களோ என்று நினைக்கிறேன்.

தலைவர் கருணாநிதி நாட்டு மக்களுக்கு, ஏழை மக்களுக்கு, சிறுபான்மை மக்களுக்கு, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு உதவும் கரமாக இருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி உதவாக்கரையாக இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி திடீரென நாட்டுப்பற்று வந்தது போன்று இந்தியா பாதுகாப்பாக இருக்க மோடி பிரதமராக வரவேண்டும் என்கிறார்.

புலவாமாவில் 40 துணை ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதுதான் பாதுகாப்பா?. காஷ்மீரில் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்து உள்ளது. அதன்பிறகு தற்போதுதான் நடந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுதான் நாட்டுக்கு பாதுகாப்பா?. கடந்த 2015-ம் ஆண்டு 751 மதக்கலவரங்களில் 97 பேரும், 2016-ம் ஆண்டு நடந்த 703 மதக்கலவரங்களில் 8 பேரும், 2017-ம் ஆண்டு நடந்த 882 மதக்கலவரங்களில் 111 பேரும் கொல்லப்பட்டு உள்ளனர். அதிகமாக உத்தரபிரதேசம், குஜராத், பீகார், மராட்டிய மாநிலங்களில் நடந்து உள்ளது. இந்த மாநிலங்கள் அனைத்தும் பா.ஜனதா செல்வாக்கு உள்ள மாநிலம். அது போன்று தமிழகத்தை ஆக்குவதற்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க. இருக்கிற வரை அது நடக்காது.

தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று கோவையில் மோடி பேசி உள்ளார். அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையே. இது பிரதமருக்கு தெரியவில்லையா?. தெரிந்தும், தெரியாதது போன்று இருப்பதால்தான் பாசிச பா.ஜனதா என்கிறோம்.

தற்போது மோடிதான் அ.தி.மு.க.வுக்கு முட்டு கொடுத்துக் கொண்டு இருக்கிறார். 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சிக்கு வரும். ஜூன் மாதம் 3-ந் தேதி தலைவர் கருணாநிதி பிறந்தநாளில் மோடி பிரதமராக இருக்க மாட்டார். அன்று தமிழகத்தில் புதிய ஆட்சி மலரும்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தூத்துக்குடி தொகுதிக்கும் பல திட்டங்களை அறிவித்து உள்ளோம். எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியும், அ.தி.மு.க. அரசு ஸ்டெர்லைட் ஆலையை கொள்கை முடிவு எடுத்து மூடவில்லை. ஆகையால் தி.மு.க. ஆட்சி அமைந்ததும், கொள்கை முடிவு எடுத்து, சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவோம். ஜனநாயக ரீதியில் அமைதியாக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் மேம்படுத்தப்படும். ராமநாதபுரம்-தூத்துக்குடி கடற்கரை புதிய ரெயில்பாதை அமைக்கப்படும். குலசேகரன்பட்டினத்தில் 2-வது ராக்கெட் தளம், தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவில் விமானம் இறங்கும் வசதி, சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும். உப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்களுக்கு தனி அமைச்சகம், நவீன மீன்பிடி உபகரணம் அமைக்கப்படும். தலைவர் கருணாநிதிக்கு ஒரு உறுதிமொழி கொடுத்து உள்ளோம். தி.மு.க. ஆட்சியை ஏற்படுத்தி அதனை சமர்ப்பிப்போம் என்று உறுதி கொடுத்து உள்ளோம். அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவோம். ஆகையால் நாடாளுமன்ற தொகுதி மற்றும் இடைத்தேர்தலில் வெற்றி பெற உதய சூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், தமிழரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டசபை தேர்தல்: மராட்டியத்தில் இன்று பிரசாரம் ஓய்கிறது; நாளை மறுநாள் வாக்குப்பதிவு
மராட்டிய சட்டசபை தேர்தலில் அனல் பறக்கும் பிரசாரம் இன்றுடன் ஓய்வதால் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர். ஒரே கட்டமாக நாளை மறுநாள்(திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது.
2. அ.தி.மு.க. தொண்டர்களின் நாவில் தேன் தடவுகிறார்; மு.க.ஸ்டாலின் மீது அன்பழகன் தாக்கு
அ.தி.மு.க. தொண்டர்களின் நாவில் மு.க. ஸ்டாலின் தேன் தடவுகிறார் என்று அன்பழகன் எம். எல்.ஏ. கூறினார்.
3. அரசியல் நாடகத்தை அரங்கேற்றி, வாக்காளர்களுக்கு துரோகம் செய்த மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுங்கள் - விக்கிரவாண்டியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வாக்காளர்களுக்கு துரோகம் செய்த மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுங்கள் என்று விக்கிரவாண்டியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
4. நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம்
நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார்.
5. தமிழகம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வருக,வருக என மனமார வரவேற்கிறோம் - மு.க.ஸ்டாலின்
தமிழகம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வருக,வருக என மனமார வரவேற்கிறோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.