தேவேகவுடா, சித்தராமையா :துமகூரு தொகுதியில் கூட்டு பிரசாரம்
அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த தேவேகவுடாவும், சித்தராமையாவும் கூட்டு சேர்ந்துதுமகூரு தொகுதியில் பிரசாரம் செய்தனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸ் 21 தொகுதியிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 7 தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
இதில் துமகூரு தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, ஜனதா தளம்(எஸ்) சார்பில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் அவர் நேற்று பிரசாரம் செய்தார். அவருடன் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா வாக்கு சேகரித்தார்.
கர்நாடக அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த தேவேகவுடா மற்றும் சித்தராமையா ஆகியோா் தற்போது கூட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். துமகூருவில் திப்தூர், சிக்கநாயக்கனஹள்ளி, மதுகிரி ஆகிய இடங்களில் நேற்று அவர்கள் பிரசாரம் செய்தனர்.
சித்தராமையா பேசுகையில், “பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் எந்த வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை. அதனால் தான் தேர்தல் பிரசாரத்தில் அவர் வளர்ச்சி பணிகள் பற்றி பேசாமல், விமான தாக்குதல் குறித்து பேசுகிறார். 56 இஞ்ச்க்கு மார்பு இருந்தால் மட்டும் போதாது, நல்லது செய்ய வேண்டும் என்ற இதயம் இருக்க வேண்டும். அப்போது தான் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய முடியும்” என்றார்.
அரசியலில் எதிரெதிர் துருவங்களான தேவேகவுடாவும், சித்தராமையாவும் கூட்டு பிரசாரம் செய்த விவகாரம் கர்நாடக தேர்தல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது.