நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிர்ப்பு அலை தான் வீசுகிறது கி.வீரமணி பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிர்ப்பு அலை தான் வீசுகிறது கி.வீரமணி பேட்டி
x
தினத்தந்தி 11 April 2019 11:15 PM GMT (Updated: 11 April 2019 7:24 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு அலை தான் வீசுகிறது என கரூரில் தி.க. தலைவர் கி.வீரமணி கூறினார்.

கரூர்,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி திருச்சியிலிருந்து கரூர் வழியாக ஈரோடு மாவட்டம் கோபி பகுதிக்கு நேற்று வேனில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் காங்கிரஸ்-தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் சார்பில் வீரமணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது:-

தென் மாவட்டங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு அலை தான் வீசுகிறது. மோடி ஆட்சியையும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்புவதில் மக்கள் தீர்மானமாக உள்ளனர். ரபேல் போர் விமான ஊழல் ஆவணங்களை கோர்ட்டில் ஆதாரத்துடன் கொடுத்தபோதும் கூட அது திருடப்பட்ட ஆவணம் எனக்கூறி மறுசீராய்வு மனுவை ரத்து செய்யுமாறு கூறியது உள்ளிட்டவை மோடி அரசுக்கு பெரிய பின்னடைவு தான்.

தற்போதும் கூட ராமர் கோவிலை கட்டுவோம் என கூறி மதவெறியை நாட்டில் கிளப்பி விட்டு ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று பா.ஜனதா கட்சியினர் நினைக்கிறார்கள். அவர்களது தோல்வி உறுதி என்பதால், எங்களை போன்றவர்கள் பேசுவதை தடுக்கிறார்கள். எனக்கு பல இடங்களில் கொடுத்த அனுமதியை ரத்து செய்கிறார்கள். பெரியார் சிலையை உடைக்கிறார்கள். இது ரவுடித்தனத்தை தான் காட்டுகிறது.

காங்கிரஸ்-தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வேலை வாய்ப்பின்மையை அகற்றுவதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் பல்வேறு சாத்தியமான திட்டங்கள் கூறப்பட்டுள்ளன. கருணாநிதி ஆட்சியில் விவசாய கடன் ரத்து செய்யப்பட்டது. தற்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த மாநிலங்களிலும் விவசாய கடன் ரத்து செய்யப்பட்டது. எனவே பணத்தாலோ, போலி கருத்து கணிப்பாலோ பா.ஜனதா கட்சி வெற்றி பெற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story