கவனிக்க ஆள் இல்லாத வேதனையில் மனைவிக்கு விஷம் கொடுத்து விட்டு கணவர் தற்கொலை குமாரபாளையத்தில் சோகம்


கவனிக்க ஆள் இல்லாத வேதனையில் மனைவிக்கு விஷம் கொடுத்து விட்டு கணவர் தற்கொலை குமாரபாளையத்தில் சோகம்
x
தினத்தந்தி 12 April 2019 4:15 AM IST (Updated: 12 April 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையத்தில் கவனிக்க ஆள் இல்லாத வேதனையில் மனைவிக்கு விஷம் கொடுத்து விட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குமாரபாளையம்,

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மேற்கு காலனியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 64), எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி ஜெகதீஸ்வரி (60). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து விட்டு வயது மூப்பு காரணமாக வீட்டில் இருந்துள்ளார். இவர்களுக்கு திருமணம் ஆகி 40 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.

வயது மூப்பு காரணமாக வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்த சந்திரசேகரன் கடந்த சில மாதங்களாக வாதநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் தனிமையில் வசித்து வந்த அவர்கள் தங்களை உடன் இருந்து கவனிக்க தகுந்த ஆள் இல்லாத வேதனையில் இருந்தனர். இதையடுத்து அந்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு சந்திரசேகரன் விஷ மருந்தை குடித்து விட்டு, தனது மனைவிக்கும் கொடுத்துள்ளார். இதில் சந்திரசேகரன் வீட்டிலேயே இறந்து விட்டார். ஜெகதீஸ்வரி உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார்.

இதனிடையே நேற்று அதிகாலை அவர்களின் வீட்டுக்கு வழக்கமாக பால் கொண்டு வருபவர் வந்தார். கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர், அக்கம் பக்கத்தினரை அழைத்துக்கொண்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு சந்திரசேகரன் இறந்து கிடந்ததையும், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜெகதீஸ்வரி மயங்கி கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், சந்திரசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிருக்கு போராடிய ஜெகதீஸ்வரியை, ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் அந்த தம்பதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஜெகதீஸ்வரி எழுதிய கடிதம் ஒன்று அந்த வீட்டில் சிக்கியது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்த தற்கொலை முடிவு நாங்கள் நீண்ட நாட்களாக யோசித்து எடுத்த முடிவு. எங்களுக்கு குழந்தை இல்லை. எங்கள் பீரோவில் உள்ள ரூ.23 ஆயிரம் ரொக்கம், 6 பவுன் நகையை எனது தம்பியிடம் ஒப்படைத்து விடுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கவனிக்க ஆள் இல்லாத வேதனையில், மனைவிக்கு விஷம் கொடுத்து விட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story