மீனவ கிராமங்களில் பா.ஜனதாவுக்கு சிறப்பான வரவேற்பு பொன்.ராதாகிருஷ்ணன் சொல்கிறார்


மீனவ கிராமங்களில் பா.ஜனதாவுக்கு சிறப்பான வரவேற்பு பொன்.ராதாகிருஷ்ணன் சொல்கிறார்
x
தினத்தந்தி 12 April 2019 4:30 AM IST (Updated: 12 April 2019 2:27 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட மீனவ கிராமங்களில் பா.ஜனதாவுக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று திருநந்திக்கரை நந்தீஸ்வரர் பகுதியில் இருந்து திறந்த ஜீப்பில் பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் காக்கச்சல், கடம்பன்மூடு, பேச்சிப்பாறை சீரோ பாயிண்ட், சிலோன் காலனி, மோதிரமலை, கோதையார், குற்றியார், வலியாற்றுமுகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக தக்கலையில் வாக்கு சேகரித்த பிறகு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கன்னியாகுமரி தொகுதியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்துங்கள் என்று டி.டி.வி. தினகரனிடம் நான் கூறியதாக சொல்வது சரியில்லை. தேர்தல் நெருங்குவதால் ஏதாவது பரபரப்பை ஏற்படுத்தி தனது கட்சி வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று அந்தந்த கட்சி தலைவர்கள் செயல்படுவது அரசியலில் வாடிக்கை தான். எனவே டி.டி.வி.தினகரன் கூறியதையும், நான் அரசியல் வாடிக்கையாகவே கருதுகிறேன். கருப்பு முருகானந்தம் தமாஷாக கூட பேசி இருக்கலாம்.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மக்களுக்கு டோக்கன் கொடுத்தார். கடை வைத்திருப்பவர்கள் டோக்கன் கொடுக்கத்தான் செய்வார்கள். ஆனால் நான் கடை வைத்திருக்கவில்லை. நான் மீனவ கிராமங்களுக்கு வாக்கு சேகரிக்க சென்றேன். அங்கு பா.ஜனதாவுக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. நாங்கள் 1998-க்கு பிறகு அனைத்து மத தலைவர்களையும் சந்தித்து ஆசி பெற்றிருக்கிறோம். வட கிழக்கு மாகாணத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. இதனால் அனைவரும் பா.ஜனதாவுக்கு வாக்களித்தனர். அந்த மாநிலங்களில் தற்போது பா.ஜனதா ஆட்சி நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே குமரி மாவட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக தமிழ் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதாவது நடிகர்கள் வி.டி.தினகரன், ஜெயந்த், நடிகைகள் கற்பகம், பத்மினி, ஆனந்தி ஆகியோர் மணவாளக்குறிச்சி சந்திப்பு, குளச்சல் அண்ணாசிலை சந்திப்பு ஆகிய பகுதியில் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். 

Next Story