தமிழகத்தில் விரைவில் நல்லாட்சி அமையும் கனிமொழி எம்.பி. பேச்சு
தமிழகத்தில் விரைவில் நல்லாட்சி அமையும் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.
விளாத்திகுளம்,
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து, தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. நேற்று மாலையில் விளாத்திகுளம் அருகே பனையூரில் திறந்த வேனில் சென்று தனது பிரசாரத்தை தொடங்கினார்.
பின்னர் அவர், குளத்தூர், கீழ வைப்பார், வைப்பார், இ.வேலாயுதபுரம், மேல்மாந்தை, பல்லாகுளம், பெரியசாமிபுரம், பச்சையாபுரம், வேம்பார், சூரங்குடி, அரியநாயகிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று, உதயசூரியன் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
பிரசாரத்தின்போது கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
மதவாதம், வகுப்புவாதத்தின் மூலம் நாட்டை துண்டாட நினைக்கும் பா.ஜனதா அரசையும், அதற்கு அடிமையாக, தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் இழந்து, சேவகம் செய்யும் அ.தி.மு.க. அரசையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது.
மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையிலும், தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் விரைவில் நல்லாட்சி அமையும். தொடர்ந்து தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, என்னையும், ஜெயக்குமாரையும் அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.
பிரசாரத்தின் போது தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story