கோடநாடு வழக்கு, ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர் - விசாரணை 26-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
கோடநாடு வழக்கில் ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜரானார்கள். இந்த வழக்கு விசாரணை வருகிற 26-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பிரகாஷ் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுதொடர்பாக ஷயான், மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
ஷயான், மனோஜ், திபு, பிஜின், மனோஜ்சாமி ஆகிய 5 பேர் கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். ஷயான் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருப்பதால், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். மனோஜ்சாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் அவரை ஜாமீனில் எடுக்க யாரும் முன்வரவில்லை. இதற்கிடையே தங்களை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனுவை வக்கீல் சிவக்குமார் திரும்பபெற்றதால் ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் தங்களது வக்கீலை மாற்றுவதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. கோவை மத்திய சிறையில் இருந்து ஷயான், மனோஜ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்து ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். ஜாமீனில் வெளியே உள்ள சந்தோஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, ஜித்தின்ராய், உதயகுமார் ஆகிய 5 பேரும் ஆஜராகினர். ஷயான், மனோஜ் சார்பில் வக்கீல் ஆனந்த், மற்ற 8 பேர் தரப்பில் வக்கீல்கள் ஜெபஸ்டீன், ரவிச்சந்திரன் ஆஜராவதாக தெரிவித்தனர். அதற்கான மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
கோடநாடு வழக்கில் இருந்து 10 பேரையும் விடுவிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அப்போது ஏற்கனவே வழக்கில் விடுவிக்கக்கோரிய மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது, பின்னர் தாக்கல் செய்யப்பட்ட மனு திரும்ப பெறப்பட்டது, தற்போது மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது, வழக்கு விசாரணையை காலதாமதம் செய்யவே மனுத்தாக்கல் செய்யப்படுகிறது என்று அரசு வக்கீல் பாலநந்தகுமார் நீதிபதியிடம் தெரிவித்தார். மேலும் தற்போது மொழிபெயர்ப்பாளர் வந்து உள்ளதால் வழக்கை விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் வழக்கு விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு நீதிபதி வடமலை தள்ளி வைத்தார்.
மேலும் வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனுவுக்கு அரசு வக்கீல் பதில் அளிக்கும்படி தெரிவித்தார். மனோஜ்சாமி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கோவை ஜெயிலர் மூலம் மனு ஒன்றை நீதிமன்றத்தில் கொடுத்தார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட நீதிபதி, வக்கீல் நியமிக்கப்பட்டு உள்ளதால் அவர் மூலம் மனுவை தாக்கல் செய்யும்படி தெரிவித்தார். அதனை தொடர்ந்து ஷயான், மனோஜ் உள்பட 5 பேரை போலீசார் கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story