பதற்றமான வாக்குச்சாவடிகளில் பொருத்த 1,550 ‘வெப் கேமரா’க்கள் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டன
நெல்லை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பொருத்த 1,550 ‘வெப் கேமரா‘க்கள் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் நெல்லை மற்றும் தென்காசி (தனி) ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு தேர்தல் நடத்துவதற்கு தேவையான அனைத்து பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல்லை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி ஷில்பா, தென்காசி தொகுதி தேர்தல் அதிகாரி முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமையில் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இங்குள்ள தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் பிரச்சினைக்குரிய பகுதிகள் போலீசார் மூலம் கண்டறியப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அங்கு நுண்பார்வையாளர்கள் வாக்குச்சாவடி பணியில் கூடுதலாக ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதுதவிர போலீசாருடன், துணை ராணுவ வீரர்களும் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.
மேலும் இந்த வாக்குச்சாவடிகளில், ஓட்டுப்பதிவை முழுமையாக கண்காணிக்கும் வகையில் ‘வெப் கேமரா’க்களும் பொருத்தப்படுகின்றன. இதற்காக சென்னையில் இருந்து 1,550 ‘வெப் கேமரா’க்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு லாரி மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றை அதிகாரிகள் நேற்று வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்துக்கு கொண்டு சென்று பிரித்து சரிபார்த்தனர்.
இதில் 773 கேமராக்கள் நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கும், 777 கேமராக்கள் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவை இன்று (சனிக்கிழமை) அந்தந்த சட்டசபை தொகுதி தலைமை இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அங்கிருந்து வாக்குப்பதிவு எந்திரங்களுடன், கேமராக்கள் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக நியமிக்கப்பட்டு இருக்கும் ஊழியர்கள் வாக்குச்சாவடிகளில் இந்த கேமராக்களை பொருத்தி, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் தொலைதொடர்பு இணைப்பு கொடுத்து விடுவார்கள்.
இதன்மூலம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் என்ன நடக்கிறது? என்பதை கட்டுப்பாட்டு அறையில் இருந்தே அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்க முடியும். இதற்காக கட்டுப்பாட்டு அறையில் 3 பெரிய எல்.இ.டி. டி.வி.க்கள் பொருத்தப்படுகின்றன என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறினர்.
Related Tags :
Next Story