பயணிகளிடம் 9 செல்போன்கள் திருடிய வாலிபர் : ஒரு மணி நேரத்தில் பிடிபட்டார்


பயணிகளிடம் 9 செல்போன்கள் திருடிய வாலிபர் : ஒரு மணி நேரத்தில் பிடிபட்டார்
x
தினத்தந்தி 13 April 2019 4:26 AM IST (Updated: 13 April 2019 4:26 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் ரெயிலில் ஒரு மணி நேரத்தில் பயணிகளிடம் 9 செல்போன்கள் திருடிய வாலிபரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மும்பை, 

நாக்பூரில் இருந்து நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரெயில் மும்பை சி.எஸ்.எம்.டி. நோக்கி வந்து கொண்டு இருந்தது. அந்த ரெயில் கல்யாணை தாண்டி அதிகாலை 4.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது.

ரெயில் தாதரை நெருங்கி கொண்டிருந்த போது, பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தூங்கும் வசதிகொண்ட பெட்டியில் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக ஒரு பெட்டியில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்ததை கவனித்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து சோதனை போட்டனர்.

இதில், அவரது பேண்டு பைகளில் 11 செல்போன்கள் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், 9 செல்போன்கள் ரெயில் பயணிகளிடம் இருந்து திருடப்பட்டவை என்பது தெரியவந்தது. கல்யாண் ரெயில் நிலையத்தில் ஏறிய அந்த வாலிபர், 1 மணி நேரத்துக்குள் தூக்கத்தில் இருந்த பயணிகளிடம் இருந்து செல்போன்கள் மற்றும் சார்ஜரில் போடப்பட்டு இருந்த செல்போன்களை சுருட்டியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் பிரகாஷ் ராஜேஸ் சிங் (வயது19) என்பது தெரியவந்தது.

போலீசார் திருட்டு செல்போன்களை உரிய பயணிகளிடம் திருப்பி கொடுத்தனர். மேலும் பிரகாஷ் ராஜேஸ் சிங் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story