மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் - சிதம்பரம் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்த தேர்தல் மூலம் மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சிதம்பரம்,
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கடலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ரமேஷ் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சிதம்பரம் கீழவீதியில் நடைபெற்றது.
இதற்கு தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-
வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ள தேர்தலில், மத்தியில் நடைபெறுகிற மோடி தலைமையிலான சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டிட வேண்டும். இந்த உணர்வோடு தான் நாம் இந்த தேர்தலை அணுகப் போகிறோம். சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பானை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அவரை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். இந்த சின்னம் எவ்வளவு முக்கியம் என்பதை அவரே தெளிவுபடுத்தி கூறி இருக்கிறார்.
இங்கு கலைஞரே நிற்கிறார் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அவர் இன்று நம்மோடு இல்லை, இயற்கை பிரித்துவிட்டது. இருப்பினும் அவர் நம் உணர்வோடு கலந்து இருக்கிறார். தொடர்ந்து தமிழர்களுக்காக போராடி வரும் திருமாவளவன் வெற்றி பெற்றால், அது கலைஞரே வெற்றிபெற்றதாக அர்த்தமாகும்.
இந்த தேர்தல் மூலம் இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதேபோல் தமிழகத்தில் உள்ள ஆட்சியும் தானாக போகும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. ஒருவருக்கும் உதவாத வகையில் தமிழகத்தில் இந்த ஆட்சி நடந்து வருகிறது.
5 முறை கலைஞர் ஆட்சியில் இருந்தார். அவரது ஆட்சி மக்களுக்கு உதவும் ஆட்சியாக இருந்தது. 50 ஆண்டுகளில் அனைத்து வளர்ச்சிகளுக்கும் அடித்தளம் அமைத்தது திராவிட இயக்கம் தான். ஆதலால் மீண்டும் தி.மு.க. ஆட்சி மலர வேண்டும். தி.மு.க. ஆட்சியின் போது விவசாயிகள், தொழிலாளர்களின் முகம் மலருகிறது. தமிழக மக்களுக்காக தாயாக இருந்து கலைஞர் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார்.
தமிழகத்தில் தற்போதுள்ள ஆட்சியில் ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் ஆலையில் துப்பாக்கி சூடு, எட்டு வழிச்சாலையில் போராடிய விவசாயிகளை விரட்டி அடித்தனர், பார்வையற்றவர்களை கூட விரட்டி அடித்தனர். குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோருக்கு தொடர்பு இருக்கிறது. மக்களை பாதுகாக்கும் நல்வாழ்வுத்துறையும், காவல்துறையும் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இப்படிப்பட்ட ஆட்சிக்கு முட்டுக்கொடுப்பது மோடி தலைமையிலான ஆட்சி. நாடாளுமன்ற தேர்தலுக்காக வாரந்தோறும் பிரசாரத்திற்கு தமிழகம் வந்து வாக்குறுதி கொடுக்கிறார் மோடி. இதற்கு முன்பு நடந்த தேர்தலில் இதுபோன்று அதை செய்வேன், இதை செய்வேன் என்று வாக்குறுதியை தந்தார். ஆனால் இவர்களது 5 ஆண்டுகால ஆட்சியில் 50 ஆண்டுகள் நாடு பின்நோக்கி செல்வதாக இருக்கிறது.
பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டனர். இதில் கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதாக தெரிவித்தார். திருடனை பிடிக்க நினைத்தால் நேரடியாக பிடிக்க வேண்டும், ஆனால் மக்களை பிடித்துக்கொண்டு திருடனை பிடிப்பது என்பது எப்படி நியாயமாகும்.
தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக அ.தி.மு.க.வும், மத்தியில் 5 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சியும் தான் நடக்கிறது. நீங்கள் என்ன செய்தீர்கள். செய்யப் போவதை சொல்ல வேண்டும். அதைவிட்டு விட்டு தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளை பழித்து பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. மக்கள் பிரச்சினைகளை அவர் தீர்க்கவில்லை.
மோடி தேர்தல் பிரசாரத்தின் போது நான் ஏழைத்தாயின் மகன் என்று பேசுகிறார். ஆனால் ஏழைத்தாயின் மகன் ஏழைகளை மேலும் ஏழைகளாகவும், பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும் மாற்றுகிறார்.தேர்தல் அறிக்கையை வெளியிட்ட போது, தனது 5 ஆண்டுகால ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை என்று மோடி தெரிவித்தார். ஆனால் ரபேல் ஊழல் வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.
மோடி, தான் டீ விற்பனை செய்து வந்தவர் என்று சொல்லி வருகிறார். டீ விற்பதை நான் குறைசொல்லமாட்டேன். ஆனால் அவர் விஜய்மல்லையா, லலித்மோடி உள்ளிட்ட பெரும் பணக்காரர்களுக்கு தான் துணையாக இருந்தார்.
கடந்த 20-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து செய்து வருகிறேன். செல்லும் இடமெல்லாம் இந்த ஆட்சியை பார்த்து நான் 3 கேள்விகள் கேட்கிறேன். ஆனால் இதுவரையில் அந்த கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்கவில்லை.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம், பொள்ளாச்சி விவகாரம், கொடநாடு கொள்ளை ஆகியன தொடர்பாக நான் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை பதில் வரவில்லை. தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இந்த 3 சம்பவங்களில் தொடர்புடையவர்களை கைது செய்து சிறையில் அடைப்போம்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி தான் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ஆட்சியை காப்பாற்றிக்கொண்டு இருப்பவர் காவலாளி மோடி. மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள ஆட்சிகளை வீட்டுக்கு அனுப்ப நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுதான் வர இருக்கிற தேர்தல். இதன் மூலம் மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திட வேண்டும்.
கலைஞர் இருந்திருந்தால், தம்பி என்று கூறி திருமாவளவனுக்கு ஓட்டு கேட்டு இருப்பார். அவர் இன்று நம்மோடு இல்லாததால் நான் வந்து ஓட்டு கேட்கிறேன். திருமாவளவனுக்கு பானை சின்னத்திலும், கடலூர் தொகுதியில் போட்டியிடும் ரமேசுக்கு உதயசூரியன் சின்னத்திலும் வாக்களித்து அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி வேட்பாளருமான திருமாவளவன் பேசியதாவது:-
நமது கூட்டணி கொள்கை கூட்டணியாகும். தேர்தல் நேரத்தில் பேரம் பேசும் கூட்டணி அல்ல. அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியானது வருமான வரித்துறை சோதனை போன்றவற்றால் அச்சுறுத்தி நிர்ப்பந்தம் செய்து தான் சேர்ந்தது. அதேபோல் பா.ம.க., தே.மு.தி.க. ஆகியன பேரம் பேசி சேர்ந்தவை ஆகும். இது ஒரு பொருந்தாத கூட்டணி ஆகும்.
வன்னியர்களுக்கு எதிராக நான் பேசியதில்லை. சிதம்பரம் தொகுதியில் நாம் வெற்றி பெற்று ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்துவோம். 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று, பிரதமரை தீர்மானிக்கும் இடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இருப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஹைதர் அலி, தி.மு.க. எம். எல்.ஏ. துரை.கி.சரவணன், மாவட்ட செயலாளர்கள் அரியலூர் சிவசங்கர், பெரம்பலூர் ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளர் வன்னியரசு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story