காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகம் பாதிப்பு யூனியன் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை


காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகம் பாதிப்பு யூனியன் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 12 April 2019 11:35 PM GMT (Updated: 12 April 2019 11:35 PM GMT)

ஆதியூர் கிராமத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டதால் யூனியன் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

தொண்டி,

திருவாடானை தாலுகா ஆதியூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் 75–க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதி மக்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஒரு மாதமாக இப்பகுதிக்கு வரும் குடிநீர் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருவாடானை யூனியன் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

ஆனால் அதிகாரிகள் இதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறிவந்தனர். இந்த நிலையில் ஆதியூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100–க்கும் மேற்பட்டோர் யூனியன் அலுவலகத்தில் முற்றுகையிட்டு கடந்த ஒரு மாத காலமாக ஆதியூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை, எனவே உடனடியாக ஆதிதிராவிடர் குடியிருப்புக்கு குடிநீர் வினியோகம் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதையடுத்து அதிகாரிகள் தரப்பில் உடனடியாக ஆதியூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story