ராமநாதபுரத்தில் இன்று பொதுக்கூட்டம்; பிரதமர் மோடி மதுரை வந்தார்


ராமநாதபுரத்தில் இன்று பொதுக்கூட்டம்; பிரதமர் மோடி மதுரை வந்தார்
x
தினத்தந்தி 13 April 2019 5:45 AM IST (Updated: 13 April 2019 5:07 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் இன்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க உள்ள பிரதமர் நேற்று மதுரைக்கு வந்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு மதுரைக்கு வந்தார். அவர் இன்று (சனிக்கிழமை) மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்கிறார்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஹெலிகாப்டர் தளத்திற்கு பகல் 12.45 மணிக்கு வந்தடையும் அவர் 12.50 மணிக்கு டி-பிளாக் அம்மா பூங்கா அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடைக்கு வந்து தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் 1.40 மணிக்கு கூட்டத்தை முடித்துக்கொண்டு 1.50 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்று அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார்.

இந்த பொதுக்கூட்டத்தில் நாடாளுமன்ற வேட்பாளர்கள் ராமநாதபுரம் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடி தமிழிசை சவுந்திரராஜன், தென்காசி டாக்டர் கிருஷ்ணசாமி, சிவகங்கை எச்.ராஜா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள் சேகரிக்கிறார். இக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மணிகண்டன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க. தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த பிரசார கூட்டத்திற்காக ராமநாதபுரம் டி-பிளாக் அம்மா பூங்கா அருகே பெரிய மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சம் பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதுடன் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேடையில் தலைவர்கள் அமருவதற்கு இருக்கை வசதியுடன் பின்புறம் டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே டிஜிட்டல் திரைகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் பார்க்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதனையொட்டி பிரமாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணி கடந்த ஒருவாரமாக இரவு பகலாக நடைபெற்று வருகிறது. மைதானத்தை சுற்றிலும் உள்ள சாலைகள் புதிதாக போடப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர் தளம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் ஆகியவை 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுக்கூட்டத்துக்கு வரும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள், கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள், எமர்ஜென்சி வாகனங்கள் தனித்தனியாக நிறுத்தும் வகையில் 4 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி., ஐ.ஜி., டி.ஐ.ஜி.க்கள் மற்றும் 15 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் வந்திறங்கும் ஹெலிகாப்டர் தளத்தில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டு ஒத்திகை நடைபெற்றது. பிரதமர் வாகன அணிவகுப்பு செல்லும் வழியில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. போலீஸ் டி.ஐ.ஜி. காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா மற்றும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் பாதுகாப்பை கண்காணித்து வருகின்றனர்.

Next Story