5 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை - நாராயணசாமி பேச்சு


5 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை - நாராயணசாமி பேச்சு
x
தினத்தந்தி 13 April 2019 5:55 AM IST (Updated: 13 April 2019 5:55 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் பிரதமர் நரேந்திரமோடி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை என்று நாராயணசாமி கூறினார்.

அரியாங்குப்பம்,

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து அரியாங்குப்பம், வீராம்பட்டினம், முருங்கப்பாக்கம், தேங்காய்திட்டு உள்ளிட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒரே தேசம் ஒரே வரி என்ற பெயரில் நாட்டில் 5 விதமான வரிகளை நரேந்திர மோடி கொண்டு வந்தார். அவருடைய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையாலும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பினாலும் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டது.

கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை. வெளிநாட்டு மூலதனம் நமது நாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை.

என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் வாங்கிய ரூ.7 ஆயிரம் கோடி கடனை ரத்து செய்ய கோரிக்கை வைத்தோம். ஆனால் அந்த கோரிக்கைக்கு பிரதமர் செவி சாய்க்கவில்லை. கடும் குளிரில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி டெல்லியில் போராட்டம் நடத்தினோம். அதற்கும் செவி சாய்க்கவில்லை. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து போராட்டம் நடத்தினோம்.

அந்த சமயத்தில் போராட்டத்தில் கலந்துகொள்ளாத என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க.வினர் இப்போது எங்கள் அரசை வசை பாடுகின்றனர். புதுச்சேரிக்கு மத்திய அரசின் நிதியை அதிகம் பெறவும், நல்ல திட்டங்களை கொண்டு வரவும் அனுபவமிக்க மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் தலைவர் வைத்திலிங்கம் நாடாளுமன்றம் செல்ல வேண்டும். மாநிலத்தில் அனைத்து தரப்பினரும் முன்னேற கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

Next Story