புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புஞ்சைபுளியம்பட்டி,
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் எரங்காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள போலீஸ் நிலைய ரோட்டுக்கு நேற்று காலை 9 மணி அளவில் வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் திடீரென சீராக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் கோஷங்கள் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் மற்றும் பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் மைதிலி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில், எரங்காட்டுப்பாளையம் பகுதியில் பவானி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீர் மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஏற்றப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக எங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இதனால் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இதேபோல் எங்கள் பகுதியில் சாக்கடை கால்வாயும் தூர்வாரப்படவில்லை. இதனால் பயங்கரமான துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவுகிறது. ஆகவே எங்களுக்கு சீராக குடிநீர் வழங்குவதோடு, சாக்கடை கால்வாயை தூர்வாரி கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அதற்கு வட்டார வளர்ச்சி அதிகாரி மைதிலி, விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதோடு, சாக்கடை கால்வாயும் தூர்வாரப்படும் என்றார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு 10.30 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலைய ரோட்டில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.