திண்டுக்கல் பா.ம.க. வேட்பாளருக்கு கூட்டணி கட்சியினர் ஆதரவு இல்லையா? ஜி.கே.மணி பேட்டி


திண்டுக்கல் பா.ம.க. வேட்பாளருக்கு கூட்டணி கட்சியினர் ஆதரவு இல்லையா? ஜி.கே.மணி பேட்டி
x
தினத்தந்தி 14 April 2019 4:00 AM IST (Updated: 14 April 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் பா.ம.க. வேட்பாளருக்கு கூட்டணி கட்சியினர் ஆதரவு இல்லையா? என்பது குறித்து ஜி.கே.மணி பேட்டியளித்துள்ளார்.

திண்டுக்கல்,

பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 18–ந்தேதி நடக்கிறது. இதில் அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் தோழமை கட்சிகள் அமோக வெற்றி பெறும் என்பது உறுதி. திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்து போட்டியிடுகிறார். அதேபோல் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் தேன்மொழி சேகர் போட்டியிடுகிறார்.

இவர்கள் இருவரும் அமோக வெற்றி பெறுவதற்காக அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. மற்றும் தோழமை கட்சிகள் அயராது உழைத்து வருகின்றனர். தற்போது தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்யும் போது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை இழிவாக பேசி வருகிறார்.

இது மக்களிடம் எங்களுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தும் என அவர் நினைக்கிறார். ஆனால் அவருடைய பேச்சு மக்களிடம் அ.தி.மு.க., பா.ம.க.வுக்கு ஆதரவை அதிகப்படுத்தியுள்ளது. எனவே தேர்தலுக்கு பிறகு மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியே அமையும். அதேபோல் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று முதல்–அமைச்சராக எடப்பாடி பழனிசாமியே நீடிப்பார்.

திண்டுக்கல்லில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளருக்கு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் போதிய ஒத்துழைப்பு தருவதில்லை. ஒருங்கிணைப்பு இல்லை என கூறுகிறார்கள். அது உண்மை அல்ல. இது தி.மு.க.வினரால் கிளப்பிவிடப்பட்ட வதந்தி ஆகும். 8 வழிச்சாலை விவகாரத்தில் ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இந்த தீர்ப்புக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஒப்புதல் அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார். அதையடுத்து ஜி.கே.மணியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில்கள் விவரம் வருமாறு:–

கேள்வி:– டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்ட கூட்டத்தில் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாம்பழ சின்னத்துக்கு பதிலாக ஆப்பிள் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாரே?

பதில்:– அப்படியா...! எனக்கு தெரியாது.

கேள்வி:–கிராமப்புறங்களில் பா.ம.க. வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் என பிற கட்சியினர் கூறுகின்றனரே?

பதில்:– வாக்குச்சாவடியை யாரும் கைப்பற்ற முடியாது. கிராமப்புறங்களில் பெரும்பான்மையாக இருப்பது பா.ம.க. கட்சி தான். ஒருவேளை இதை அவர்கள் தவறாக புரிந்து கொண்டு அப்படி கூறியிருக்கலாம்.

கேள்வி:– தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் எளிதாக முறைகேடு செய்ய முடியும் என டாக்டர் ராமதாஸ் முன்பு கூறியிருந்தாரே?

பதில்:– தற்போது இதுபற்றி விரிவாக பேச இயலாது. எனினும் வாக்குச்சீட்டு முறையே சரியானது.


Next Story