வயநாட்டில் சுவரொட்டிகள்: ‘எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்துவோம்’ மாவோயிஸ்டுகள் மிரட்டல்
‘எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்துவோம்‘ என்று கேரள மாநிலம் வயநாட்டில் சுவரொட்டிகள் ஒட்டி மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுத்து உள்ளனர்.
கூடலூர்,
கேரள மாநிலம் பாலக்காடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்ட வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளனர். இவர்கள் உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வனப்பகுதியை ஒட்டி உள்ள ஆதிவாசி கிராமங்களுக்குள் வந்து செல்கின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே உள்ள படகா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மீது தண்டர்போல்ட் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அஜிதா, குப்பு தேவராஜ் ஆகிய 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சமீபத்தில் வயநாடு மாவட்டம் வைத்திரி அருகே உள்ள லெக்கிடி பகுதியில் தனியார் விடுதிக்குள் மாவோயிஸ்டுகள் புகுந்தனர். பின்னர் ஊழியரை மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் ஜலீல் என்ற மாவோயிஸ்டு கொல்லப்பட்டார். அதன்பின்னர் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தற்போது கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 23–ந் தேதி நடக்கிறது. குறிப்பாக வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். இதையொட்டி ராகுல்காந்தி, அமித்ஷா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வயநாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர்.
இந்த நிலையில் போலீசாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்துவோம் என்று வயநாடு பகுதியில் மாவோயிஸ்டுகள் சுவரொட்டிகளை ஒட்டி வைத்து உள்ளனர். அந்த சுவரொட்டிகளில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:–
காங்கிரஸ் மென்மையான இந்துத்துவத்தை கொண்டது. பா.ஜனதா வன்மையான இந்துத்துவத்தை வெளிப்படுத்துகிறது. வயநாடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒருவரையொருவர் குறை சொல்லி வாக்கு சேகரிக்கின்றனர். ஆனால் யாரும் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க ஆலோசிப்பதில்லை. எஸ்.என்.டி.பி. அமைப்பை சேர்ந்த வெள்ளாப்பள்ளி நடேசன் மகன் துசார் பா.ஜனதா கூட்டணியில் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். சாதி ஒழிப்பு கொள்கையை கொண்ட கட்சியை சேர்ந்த ஒருவரின் மகன், பா.ஜனதா கூட்டணியில் போட்டியிடுவது சரியல்ல. எனவே மக்கள் இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும். இப்படிக்கு மாவோயிஸ்டு(சி.பி.ஐ.) கபினி தலம்.
இவ்வாறு அந்த சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மாவோயிஸ்டுகள் மிரட்டல் காரணமாக வயநாடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பீதி அடைந்து உள்ளனர். மேலும் வயநாட்டில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் வனப்பகுதியை ஒட்டி உள்ள மேப்பாடி, புல்பள்ளி, திருநெல்லி, தலப்புழா, வைத்திரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய தண்டர்போல்ட் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.