இந்திய பொருளாதாரம் உற்பத்தி சரிவை சந்தித்து வருகிறது - ப.சிதம்பரம் பேட்டி


இந்திய பொருளாதாரம் உற்பத்தி சரிவை சந்தித்து வருகிறது - ப.சிதம்பரம் பேட்டி
x
தினத்தந்தி 14 April 2019 4:15 AM IST (Updated: 14 April 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

இந்திய பொருளாதாரம் உற்பத்தி சரிவை சந்தித்து வருகிறது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

காரைக்குடி,

காரைக்குடியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

தமிழக மக்கள் நீட் தேர்வை விரும்பாததால் நீட் தேர்வு ரத்து என்பதை மிகத் தெளிவாக ராகுல்காந்தி கூறியுள்ளார். அதே நேரத்தில் மற்றொரு இடத்தில பேசிய மத்திய மந்திரி பியூஸ் கோயல், பா.ஜனதா அரசு ஆட்சியில் தொடர்ந்தால் நீட் தேர்வு தொடர்ந்து அமலில் இருக்கும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கோ மற்ற மாநிலங்களுக்கோ விலக்கு அளிக்க முடியாது. இது குறித்து அ.தி.மு.க. அரசையும் சம்மதிக்க வைப்போம் என்று கூறியுள்ளார். ஆக இரு கட்சிகளின் நீட் தேர்வு குறித்த நிலைப்பாடு மக்களுக்கு தெளிவாக தெரிகிறது.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் நீட் தேர்வு இருக்காது. பா. ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு இருக்கும். தமிழகத்தின் மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை முடிவு செய்வது இப்போது தெளிவாக அமைந்துவிட்டது. ராகுல் காந்தி மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப எங்கள் கொள்கைகளை அமையும் என்கிறார். பா.ஜனதா கட்சியின் முக்கிய தலைவரோ எங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மக்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறார். இதிலிருந்து காங்கிரஸ் அரசு ஜனநாயக அரசாக அமையும். பா. ஜனதா அரசு வழக்கம் போல் தொடர்ந்து சர்வாதிகார அரசாகவே அமையும் என்பது தெரிகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நீட் தேர்வு பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா குறித்து நினைவுகூர்ந்து மிகுந்த வருத்தத்தோடு பேசினார். பா.ஜனதாவின் முக்கிய தலைவர் மாணவி அனிதா என்ற பெயரைக் கூட உச்சரிக்கவில்லை. அனிதா சாதாரண பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த ஏழைப்பெண். பியூஸ் கோயல் போன்றவர்களுக்கு ஏழ்மை ஒரு பொருட்டே கிடையாது.

ராகுல்காந்தி என்ற பெயரை கேட்டவுடன் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது அன்பா வெறுப்பா பகைமையா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள மோடி, இவை மூன்றும் இல்லை. குறிப்பிட்ட ஒருவரைப் பற்றி மட்டும் மதிப்பீடு செய்வது சரியல்ல என நினைக்கிறேன் என கூறியிருக்கிறார். இதே கேள்வி ஒருமுறை ராகுல் காந்தியிடமும் கேட்கப்பட்டது. நரேந்திர மோடியை நாடாளுமன்றத்தில் அரவணைத்து கொண்டீர்களே என்ன காரணம் என்று கேட்கப்பட்டது. அதற்கு ராகுல் காந்தி சொன்னது, ‘நான் நரேந்திர மோடியின் அரசை வெறுக்கிறேன், அந்த அரசின் கொள்கைகளை எதிர்க்கிறேன், ஆனால் நரேந்திர மோடி என்ற மனிதர் மீது எனக்கு பகைமையோ வெறுப்போ கிடையாது, அவரிடம் நான் அன்பு காட்டுகிறேன்‘ என்று பதில் சொன்னார். மக்கள் இரு பதில்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

கடந்த 20 மாதங்களாக உற்பத்தி பெருக்கம் 0.1 சதவீதமாக உள்ளது. 20 மாத காலங்களில் இந்த அளவு உற்பத்தி சரிவு ஏற்பட்டது கிடையாது. நாங்கள் எச்சரித்து வந்த சரிவு தொடர்ந்து நடைபெறுகிறது. இன்னும் சில மாதங்கள் இன்னும் கொஞ்சம் சரிவை இந்திய பொருளாதாரம் சந்திக்கும்.

2018–19–ம் ஆண்டைய வரவு– செலவு அறிக்கையில் வருவாய் வருமானம் மதிப்பீடு செய்யப்பட்டு இருக்கிறது. பட்ஜெட்டை தாக்கல் செய்த நேரத்தில் என்ன மதிப்பீடு, ஆண்டு முடிவில் இடைக்கால பட்ஜெட்டில் சொன்ன மதிப்பீடு ஆகியவற்றைப் பார்க்கும் போது நேரடி வரி வருவாய் ரூ. 50 ஆயிரம் கோடி குறைந்திருக்கிறது. ரூ.50 ஆயிரம் கோடி இழப்பு அரசின் வரி வருவாயில் ஏற்பட்டிருக்கிறது. இதனை நாங்கள் முன்கூட்டியே சொல்லி இருக்கிறோம்.

தொழில் பெருகவில்லை. அதனால் வருமானம் பெருகவில்லை. ஆதலால் நீங்கள் எதிர்பார்த்த படி வரி வருமானம் கிடைக்காது என்று சொன்னோம். அதற்கு, நாங்கள் இலக்கை அடைந்து விடுவோம் என்று கூறினர். இலக்கை அடைய வருமான வரி கட்டுபவர்களை கசக்கிப் பிழிந்தனர். எச்சரித்தனர். இருந்தும் கூட ரூ.50 ஆயிரம் கோடி துண்டு விழுந்தது. இதிலிருந்து இவர்கள் நிர்வாகத்தின் அவலட்சணம் தெரிகிறது. இது அடுத்த அரசையும் அடுத்த நிதியாண்டினையும் பாதிக்கும்.

இதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. நமது அரசு மீண்டும் வராது. அடுத்த அரசு தானே பொறுப்பு. எனவே தனக்குப் பின்னால் பேரழிவு என்ற நிலையில் பா. ஜனதா இருந்து விட்டதாகவே கருதுகிறேன். ராகுல்காந்தி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நடுத்தர வர்க்க மக்கள், சராசரி வருமானம் செலுத்தும் குடிமக்கள் இந்த இரண்டு பிரிவுகள் மீது வரிச்சுமை இருக்காது என்று தெளிவாக சொல்லி இருக்கிறார். இதை வாக்குறுதி ஆகவும் கூறுகிறேன் என அறிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு வெளிப்படையான கணக்கு இல்லை. நதிகளை இணைக்க முடியாது என்று நான் கூறவில்லை. ஆனால் எல்லா நதிகளையும் இணைக்க முடியாது. இணைப்போம் என்று கூறுபவர்கள் விஞ்ஞானம் தெரியாமல் பூகோளம் அறியாமல் நதிகள் அமைப்பு பற்றி புரியாமல் பேசுகின்றனர். மோடியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆதரிக்கிறார் என்றால் மோடியை இந்திய மக்கள் நிராகரிக்க வேண்டும்.

சிவகங்கை தொகுதியில் நாங்கள் என்ன செய்தோம் என்பதை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளோம். அதனை யாரும் மறுக்க வில்லை என்பதே உண்மை. இவ்வாறு கூறினார். பேட்டியின்போது தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், தி.மு.க. நகர செயலாளர் குணசேகரன், பள்ளத்தூர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story