தஞ்சை மாவட்டத்தில், 8 இடங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 3-ம் கட்ட பயிற்சி தபால் மூலம் வாக்குகளை பதிவு செய்தனர்


தஞ்சை மாவட்டத்தில், 8 இடங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 3-ம் கட்ட பயிற்சி தபால் மூலம் வாக்குகளை பதிவு செய்தனர்
x
தினத்தந்தி 14 April 2019 3:30 AM IST (Updated: 14 April 2019 2:51 AM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 3-ம் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. அப்போது அலுவலர்கள் தபால் மூலம் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்றுவதற்கு தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் 11,780 ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

அவ்வாறு பணி நியமன ஆணை வழங்கப்பட்டவர்களுக்கு 2 கட்டங்களாக பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. 3-ம் கட்ட பயிற்சி வகுப்பு தஞ்சை மாவட்டத்தில் 8 இடங்களில் நடைபெற்றது. தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் தஞ்சை சட்டசபை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள 2,026 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு, வாக்குச்சாவடியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் மாதிரி வாக்கு பதிவில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், பெண் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள், வாக்குச்சாவடி மையத்திற்கு அரசியல் கட்சி முகவர்கள் வரவில்லையெனில் செய்ய வேண்டியவை, வாக்குச்சாவடி மையத்தில் உறுதி செய்யப்படவேண்டிய அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

வாக்காளர் புகைப்பட சீட்டை பயன்படுத்தி வாக்களிக்க அனுமதி அளிக்கக்கூடாது எனவும், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. மன்னர் சரபோஜி கல்லூரி கலையரங்கில் தபால் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தங்களது வாக்கினை தபால் மூலம் பதிவு செய்து பெட்டியில் போட்டனர். அந்த பெட்டி சீல் வைக்கப்பட்டு இருந்தது. ஏராளமான அலுவலர்கள் தங்களுக்கு இன்னும் தபால் வாக்குச்சீட்டு வந்து சேரவில்லை என அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதற்கு அவர்கள், அனைவருக்கும் தபால் மூலம் வாக்குச்சீட்டு வீட்டிற்கு வந்து சேரும் என பதில் அளித்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தபால் மூலம் வாக்குகளை செலுத்த கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்ட பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்பு நடைபெறும்போதும் வாக்குகளை செலுத்தலாம். இவர்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் வரை தங்களது வாக்குகளை செலுத்தலாம். அதனால் அனைவருக்கும் தபால் வாக்கு சீட்டு சென்று சேரும் என்றனர்.தபால் வாக்குப்பதிவை சட்டசபை தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான சுரேஷ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், தாசில்தாருமான அருணகிரி ஆகியோர் பார்வையிட்டனர். பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு தேர்தல் பணிச்சான்று வழங்கப்பட்டது.

இதேபோல திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் பங்கேற்ற வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்கள் வாக்கினை தபால் மூலம் செலுத்துவதற்காக தபால் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. அதில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களது தபால் வாக்கினை செலுத்தினர்.

தபால் வாக்குப்பதிவை செல்போனில் படம் எடுத்து மகிழ்ந்த அலுவலர்கள்

தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி கலையரங்கில் தபால் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்வத்துடன் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.

எந்த சின்னத்திற்கு என தனது வாக்கை பதிவு செய்து அதை ஒரு கவரில் வைத்து அந்த கவரை பசையை வைத்து ஒட்டி தபால் பெட்டியில் கொண்டு வந்து அலுவலர்களும், ஆசிரியர்களும் போட்டனர்.

சில தபால் வாக்குகள் பெட்டிக்குள் முழுமையாக செல்லாமல் இருந்ததால் அது உள்ளே போகுமோ, போகாதோ என சந்தேகத்துடன் பலர் அங்கேயே தயக்கத்துடன் நின்றனர். அப்போது வருவாய்த்துறை அலுவலர்கள் அந்த பெட்டியை குலுக்கியபோது தபால் வாக்குகள் உள்ளே விழுந்தன.

தற்போது செல்போன் மோகம் அதிகமாக இருப்பதால் ஒவ்வொருவரும் தனது தபால் வாக்கை பெட்டிக்குள் செலுத்தியபோது மற்றொருவர் மூலம் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
1 More update

Next Story