திருமருகல் அருகே கிராம நிர்வாக அலுவலர்-உதவியாளர் மீது தாக்குதல் வாலிபர் கைது; மற்றொருவருக்கு வலைவீச்சு
திருமருகல் அருகே கிராம நிர்வாக அலுவலர்-உதவியாளரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருமருகல்,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கிடாமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் செல்வம் (வயது43). கிராம உதவியாளராக வேலை பார்த்து வருபவர் வாசுகி (48). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு கிடாமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள வீடுகளில் வாக்காளர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் சிலிப் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது கிடாமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்த செல்வம் என்பவர் மகன் அரிகரசுதன் (வயது25) என்பவர், அங்கு வந்து கிராம உதவியாளர் வாசுகியிடம் தனது சித்தப்பாவிற்கு பூத் சிலிப் இருக்கிறதா? என கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் செல்வம், உன்னுடைய சித்தப்பா பெயர் என்ன என்று கேட்டுள்ளார். அப்போது அரிகரசுதன், கிராம நிர்வாக அலுவலரிடம் மாட்டு வண்டிகளை பிடிக்கவும், கொடிக்கம்பங்களை இடிக்கவும் நீதான் காரணம் என கூறி தகராறு செய்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதை தொடர்ந்து அரிகரசுதன், அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினர் நெடுஞ்செழியன் என்பவரை அழைத்து வந்து 2 பேரும் சேர்ந்து கிராம நிர்வாக அலுவலர் செல்வத்தை தாக்கினர். இதை தடுக்க வந்த கிராம உதவியாளர் வாசுகியையும் தாக்கினர். காயம் அடைந்த 2 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் செல்வம் திட்டச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிகரசுதனை கைது செய்தனர். மேலும், நெடுஞ்செழியனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story