மதத்தின் பெயரால் மக்களை துண்டாட பா.ஜ.க. சூழ்ச்சி செய்கிறது - முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு


மதத்தின் பெயரால் மக்களை துண்டாட பா.ஜ.க. சூழ்ச்சி செய்கிறது - முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு
x
தினத்தந்தி 14 April 2019 11:15 PM GMT (Updated: 14 April 2019 8:10 PM GMT)

மதத்தின் பெயரால் மக்களை துண்டாட பா.ஜ.க. சூழ்ச்சி செய்வதாக உச்சிப்புளியில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.நவாஸ்கனி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து உச்சிப்புளியில் ஆர்.விசுவநாதன் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:– சாதி, மத பேதமின்றி தேசிய ஒருமைப்பாட்டுடன் வாழும் இந்திய மக்களை மதத்தின் பெயரால் பா.ஜ.க. துண்டாட சூழ்ச்சி வலை விரித்துள்ளது.

தேர்தல் வாக்குறுதிகள் எதையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை. பா.ஜ.க.வின் பொய்யான வாக்குறுதிகளை நம்ப வாக்காளர்கள் தயாரில்லை. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி புதுவை உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகள், இடைத்தேர்தல்நடைபெறும் 22 சட்டமன்ற தொகுதிகள் அனைத்திலும் வெல்லும்.

தமிழகத்தில் பா.ஜ.க.விற்கென எவ்வித அடித்தளமும் இல்லை. திராவிட கலாசாரத்தை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வை, ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக இ.பி.எஸ், ஓ.பி.எஸ். ஆகியோர் உயர்த்தி பிடிக்கின்றனர். பழனிசாமியையும், பன்னீர்செல்வத்தையும் வாய்க்கு வந்தபடி பேசிய, தமிழக அரசின் ஊழல்களை பட்டியலிட்டு கவர்னரிடம் புகார் மனு கொடுத்த பா.ம.க. அரசியல் ஆதாயங்களுக்காக தற்போது நற்சான்று வழங்கி வருகிறது.

இந்திய இறையாண்மை மீது அக்கறை கொண்டு ஒத்த கருத்துடைய அனைவரும் ஸ்டாலின் தலைமையில் ஓரணியில் திரண்டு பாசிச ஆட்சி நடத்தும் மோடியை கடுமையாக எதிர்க்கின்றனர். மதவாத மத்திய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தமிழக ஊழல் ஆட்சியை அப்புறப்படுத்தவும் வருகிற 18–ந்தேதி வாக்காளர்களாகிய நீங்கள் நல்ல தீர்ப்பு அளித்தால் மே 23–ல் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

அப்போது மாநில கட்சிகள் அங்கம் வகிக்கும் மத்திய கூட்டாட்சி அமையும். விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும். நீட் தேர்வில் இருந்து மாநில கொள்கை முடிவுப்படி விலக்கு அளிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வம், ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் காமில் உசேன், விவசாய அணி நிர்வாகி வீரபத்திரன் மற்று தி.மு.க. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.


Next Story