நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் - ஓ.பன்னீர்செல்வம் உறுதி


நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் - ஓ.பன்னீர்செல்வம் உறுதி
x
தினத்தந்தி 14 April 2019 11:00 PM GMT (Updated: 14 April 2019 8:32 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்து போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவில் அருகே தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசியதாவது:-

தமிழகத்துக்கு நல்லாட்சி கொடுத்தவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை என பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். விவசாயத்தில் தமிழகம் தொடர்ந்து 4 ஆண்டுகள் முதலிடத்தில் இருந்துள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்துக்கு ரூ.3 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். இதன் மூலம் மக்களின் ஆதரவை அ.தி.மு.க. பெற்றுள்ளது. எனவே மு.க. ஸ்டாலினின் முதல்- அமைச்சர் ஆகும் ஆசை பலிக்காது.

தேர்தல் பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தமிழகத்துக்கு தீ வைத்துவிட்டார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் வன்முறை ஆட்சி செய்து மக்கள் மனதில் தீ வைத்தது தி.மு.க. தான். மேலும் தமிழகத்தில் மின்தட்டுப்பாடு, சாதி, மத கலவரம் ஆகியவை ஏற்பட காரணமும் தி.மு.க. தான்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க காரணமாக இருந்தது தி.மு.க. தான். அந்த தடையை தகர்த்தெறிந்து தமிழர்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்தவர் பிரதமர் மோடி. எனவே மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியே நீடிக்கும். திண்டுக்கல் தொகுதியில் அவரின் கரத்தை வலுப்படுத்த பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு மாம்பழ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசார கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், மாவட்ட செயலாளர் மருதராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக நத்தத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, அ.தி.மு.க. கூட்டணி, வெற்றி கூட்டணியாகும். அ.தி.மு.க. ஆட்சியில் ஏழை மக்களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. பசுமை வீடு திட்டம் மூலம் அவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகிறது. இதுவரை 6 லட்சம் குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள மக்களுக்கு 2023-ம் ஆண்டுக்குள் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.

தற்போது பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங் களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். அ.தி.மு.க. 1½ கோடி தொண்டர்களை கொண்டது. இங்கு எத்தனை பூகம்பம், புயல் ஏற்பட்டாலும் நம்மையும், நம் தொண்டர்களையும் யாராலும் அசைக்க முடியாது என்றார்.

பிரசார கூட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ஷாஜகான், ராமராஜ், நகர செயலாளர் சிவலிங்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story