நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி: 680 துணை ராணுவ படையினர் சிறப்பு ரெயிலில் திருச்சி வந்தனர்


நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி: 680 துணை ராணுவ படையினர் சிறப்பு ரெயிலில் திருச்சி வந்தனர்
x
தினத்தந்தி 14 April 2019 11:00 PM GMT (Updated: 14 April 2019 9:08 PM GMT)

நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 680 துணை ராணுவ படையினர் சிறப்பு ரெயிலில் திருச்சி வந்தனர்.

திருச்சி,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் தேர்தல் அதிகாரிகளும் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதல் கட்டமாக துணை ராணுவ படை கடந்த சில நாட்களுக்கு முன்பு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தமிழகம் வந்தது.

அந்த வகையில் திருச்சிக்கும் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு கம்பெனி வந்தது. இவர்கள் பறக்கும் படை அதிகாரிகளுடன் இணைந்து தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே வாகன சோதனையும் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட கூடுதலாக துணை ராணுவ படையினர் வரவழைக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து நேற்று மாலை 3 மணி அளவில் திருச்சிக்கு சிறப்பு ரெயிலில் துணை ராணுவ படையினர் வந்தனர். ரெயில் நிலையத்தில் 3-வது நடைமேடையில் நின்ற அந்த ரெயிலில் இருந்து துணை ராணுவ படையினர் தங்களது உடைமைகள் மற்றும் துப்பாக்கிகளுடன் இறங்கினர். துப்பாக்கிகளை நடைமேடையில் பயணிகள் அமரும் இருக்கையில் வரிசையாக அடுக்கி வைத்திருந்தனர். சமையலுக்கு பயன்படுத்தப் படும் அடுப்பு, மளிகை பொருட்கள், உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கவசங்கள், கட்டில்கள் உள்ளிட்டவற்றையும் எடுத்து வந்திருந்தனர். அதனை துணை ராணுவ படையினர் ஒருவருக்கொருவர் உதவியுடன் தூக்கிக்கொண்டு ரெயில் நிலையத்திற்கு வெளியே வந்தனர். மொத்தம் 8 கம்பெனிகளை சேர்ந்த இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் 680 பேர் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் ரெயில் நிலைய வளாகத்தில் வரிசையாக அணிவகுத்து நின்றனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக திருச்சி மாநகருக்கு ஒரு கம்பெனியும், மாவட்ட பகுதிக்கு 3 கம்பெனிகளும், பெரம்பலூருக்கு 3 கம்பெனிகளும், கரூருக்கு ஒரு கம்பெனியும் என துணை ராணுவ படையினர் பிரித்து அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு போலீஸ் பஸ், வேன்கள் மற்றும் லாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதில் ஏறி அந்தந்த பகுதிக்கு துப்பாக்கிகள், உடைமைகளுடன் புறப்பட்டு சென்றனர். இன்று (திங்கட்கிழமை) முதல் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். வாக்குப்பதிவின் போது பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் சென்னையில் இருந்து திருச்சி வழியாக நெல்லை, கோவைக்கு சிறப்பு ரெயிலில் நேற்று காலை துணை ராணுவ படையினர் சென்றனர். அவர்களுக்கு தேவையான காலை உணவு மற்றும் பொருட்கள் அளிக்க திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Next Story