பெங்களூருவில், டிரைவர் கொலை வழக்கில் தம்பதி கைது - நண்பரின் மனைவி மீது ஆசைப்பட்டதால் கொன்றது அம்பலம்


பெங்களூருவில், டிரைவர் கொலை வழக்கில் தம்பதி கைது - நண்பரின் மனைவி மீது ஆசைப்பட்டதால் கொன்றது அம்பலம்
x
தினத்தந்தி 14 April 2019 11:43 PM GMT (Updated: 15 April 2019 12:00 AM GMT)

பெங்களூருவில், டிரைவர் கொலை வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனர். நண்பரின் மனைவி மீது ஆசைப்பட்டதால் கொன்றது அம்பலமாகி உள்ளது.

பெங்களூரு,

ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தாலுகா கோபனஹள்ளியை சேர்ந்தவர் மோகன் (வயது 29). இவருடைய மனைவி ரம்யா (25). இவர்கள் 2 பேரும் பெங்களூரு லக்கெரே அருகே உள்ள லவகுசநகரில் வசித்து வருகிறார்கள். கோபனஹள்ளியை சேர்ந்த மது என்பவர் பெங்களூருவில் டிரைவராக வேலை செய்து வந்தார்.

இவர் அடிக்கடி மோகனின் வீட்டுக்கு சென்று வந்தார். கடந்த 13-ந் தேதி மது கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ராஜகோபால்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

முதற்கட்டமாக போலீசார் மோகன்-ரம்யா ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது அவர்கள் மதுவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் கூறுகையில், ‘மோகனும், மதுவும் நண்பர்கள் ஆவார்கள். இதனால் அடிக்கடி மோகனின் வீட்டுக்கு மது சென்றார். இந்த வேளையில் ரம்யா மீது மதுவுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. தன்னுடன் கள்ளத்தொடர்பில் ஈடுபடும்படி அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கு ரம்யா மறுத்துள்ளார். தொடர்ந்து அவர் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ரம்யா சம்பவம் குறித்து மோகனிடம் கூறினார். அதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் மதுவை அழைத்து அறிவுரை கூறினார்கள். இருப்பினும் அவர் தனது மனநிலையை மாற்றி கொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த மோகன், தனது மனைவி ரம்யாவுடன் சேர்ந்து மதுவை கொன்றது அம்பலமாகி உள்ளது என்றனர்.

Next Story