இடைத்தேர்தல்களில் தி.மு.க. வெற்றிபெற்று முதல்–அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பார் காட்பாடியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தி.மு.க. வெற்றி பெற்று கலைஞர் பிறந்தநாளில் தமிழக முதல் அமைச்சராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பார் என காட்பாடியில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
காட்பாடி,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதிஸ்டாலின் வேலூரை அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து நேற்று காலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–
தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு செய்து விட்டார்கள். தமிழகம் முழுவதும் மோடி எதிர்ப்பு அலையும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு அலையும் வீசுகிறது. தமிழகத்தில் கஜா, வர்தா, ஒகி போன்ற பல புயல்களால் பல பகுதி பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக 10 சதவீத நிவாரண தொகை கூட வழங்கவில்லை. தூத்துக்குடி போராட்டம் 100 நாள் அமைதியாக நடந்தது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை சுட்டுக்கொன்றார்கள். அதை மறந்து விடாதீர்கள்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏ.டி.எம். வாசலில் வரிசையில் நின்ற 150 பேர் இறந்தனர். நீட் தேர்வு காரணமாக அரியலூர் மாணவி அனிதா பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். கல்விக்கடன் விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும். 100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும். 5 ஆண்டில் பா.ஜ.க. ஆட்சியில் சமையல் கியாஸ் விலை, கேபிள் டி.வி.கட்டணம், பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முதியோர் உதவித்தொகை திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதியோர் உதவித்தொகை திட்டம் தொடர்ந்து வழங்கப்படும்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவதாக கூறி உள்ளார். அது கண்டிப்பாக வழங்கப்படும். இந்தியாவின் வில்லனாக மோடி திகழ்கிறார். கூவத்தூரில் நடந்த கூத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சசிகலா காலை பிடித்தவர்கள் தற்போது ஆட்சியில் உள்ளார்கள். டாக்டர் அன்புமணி ராமதாஸ் என்னை ஸ்டாலின் கொடுக்கு என்கிறார். ஆமாம் நான் கொடுக்கு தான். நான் கொட்ட கொட்ட உங்களுக்கு வலிக்கிறதல்லவா. அ.தி.மு.க.அமைத்துள்ள கூட்டணி தேர்தலுக்காக அமைத்துள்ள கூட்டணி. நாங்கள் அமைத்துள்ள கூட்டணி வெற்றிக் கூட்டணி. அரக்கோணத்தின் தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கும், வேலூர் வேட்பாளர் கதிர்ஆனந்துக்கும் உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
என்னுடைய சின்ன ஆசை எதிர்கட்சி வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். இந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தி.மு.க. வெற்றி பெற்று ஜூன் 3–ந் தேதி கலைஞர் பிறந்தநாளில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்–அமைச்சராக பதவியேற்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., பகுதி செயலாளர் வன்னியராஜா, காந்திநகர் பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயராமன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.