ஆம்பூரில் வாக்காளர்களுக்கு கொடுக்க முயன்றபோது ரூ.13½ லட்சத்தை ரோட்டில் போட்டுவிட்டு ஓடிய கட்சியினர் பறக்கும்படையினர் கைப்பற்றி விசாரணை


ஆம்பூரில் வாக்காளர்களுக்கு கொடுக்க முயன்றபோது ரூ.13½ லட்சத்தை ரோட்டில் போட்டுவிட்டு ஓடிய கட்சியினர் பறக்கும்படையினர் கைப்பற்றி விசாரணை
x
தினத்தந்தி 15 April 2019 11:00 PM GMT (Updated: 15 April 2019 6:52 PM GMT)

ஆம்பூரில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ.13½ லட்சத்தை அரசியல் கட்சியினர் ரோட்டில் போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். அதனை பறக்கும்படையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர், 

வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அவர்களின் கண்காணிப்பை மீறி பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்தநிலையில் ஆம்பூர் பன்னீர்செல்வம் நகரில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக ஆம்பூர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி உதவி செலவின் பார்வையாளர் அன்பழகன் தலைமையிலான பறக்கும் படையினர் அப்பகுதிக்கு சென்றனர். பறக்கும் படையினர் வருவதை அறிந்த 2 பேர் தங்கள் கையில் வைத்து இருந்த பையை கீழே போட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.

அதைத்தொடர்ந்து அந்த பையை கைப்பற்றி பார்த்தபோது அதில் ரூ.13 லட்சத்து 60 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. அதனை அவர்கள் ஆம்பூர் தாலுகா அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் சி.பே.இந்திராவிடம் ஒப்படைத்தனர். அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுஜாதா உடன் இருந்தார்.

ஆம்பூரில் ரூ.13.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் கிடைத்ததை தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் ஆம்பூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் ஆம்பூர் பகுதியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். பணத்தை போட்டுவிட்டு சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அலங்காநல்லூரில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் மலர்விழி தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அலங்காநல்லூர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் பறக்கும் படை அதிகாரிகள் அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தைமேட்டுதெரு பகுதிக்கு சென்றனர். அங்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை கண்டவுடன் பணப்பட்டுவாடா செய்த 2 பேர் வாக்காளர் பட்டியல் மற்றும் கைப்பையை அப்படியே சாலையில் போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். அதிகாரிகள் அவர்களை பிடிக்க முயன்றும், அவர்கள் தப்பியோடிவிட்டனர்.

இதையடுத்து அவர்கள் சாலையில் போட்டுவிட்டு சென்ற கைப்பையை சோதனை செய்தபோது, அதில் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. பின்னர் அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரி மலர்விழி கைப்பற்றி வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தார்.

Next Story