தூத்துக்குடியில் பரபரப்பு: கனிமொழி வீட்டில் வருமானவரி சோதனை தி.மு.க.வினர் போராட்டம்-பதற்றம்


தூத்துக்குடியில் பரபரப்பு: கனிமொழி வீட்டில் வருமானவரி சோதனை தி.மு.க.வினர் போராட்டம்-பதற்றம்
x
தினத்தந்தி 16 April 2019 10:30 PM GMT (Updated: 16 April 2019 6:38 PM GMT)

தூத்துக்குடியில் உள்ள கனிமொழி வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பும், பதற்றமும் நிலவுகிறது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் உள்ள கனிமொழி வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பும், பதற்றமும் நிலவுகிறது.

இறுதிக்கட்ட பிரசாரம்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் தூத்துக்குடி குறிஞ்சிநகர் 2-வது தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த வீட்டின் ஒரு பகுதியில் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.

நேற்று கோவில்பட்டியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் கனிமொழி ஈடுபட்டார். அவருடன் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மாலையில் கோவில்பட்டி நகரில் முக்கிய வீதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்த அவர் இறுதிக்கட்ட பிரசாரத்தை அங்கு நிறைவு செய்தார்.

வருமானவரி சோதனை

பின்னர் அவர் தூத்துக்குடியில் உள்ள வீட்டுக்கு வந்தார். சிறிது நேரம் ஓய்வு எடுத்த அவர் கட்சி நிர்வாகிகள் சிலருடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி கொண்டிருந்தார். இரவு சுமார் 8 மணியளவில் 10 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென கனிமொழி வீட்டுக்கு வந்தனர்.

தாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என்றும், உங்கள் வீட்டில் சோதனை நடத்த வந்துள்ளோம் என்றும் கூறிவிட்டு, வீட்டின் கதவையும், ஜன்னல் கதவுகளையும் மூடினர். கனிமொழியின் செல்போன்களை வாங்கி ‘சுவிட்ச்-ஆப்‘ செய்தனர். பின்னர் அவர்கள் பிரிந்து சென்று வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்த ஒவ்வொரு அறையிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் கனிமொழி வீட்டுக்கு திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. சிறிது நேரத்துக்கு பின், கீதாஜீவனை மட்டும் போலீசார் வீட்டுக்குள் அனுமதித்தனர்.

தி.மு.க.வினர் போராட்டம்

இதையடுத்து அங்கு திரண்டிருந்த தி.மு.க. தொண்டர்கள், திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பிரதமர் மோடிக்கு எதிராகவும், தேர்தல் கமிஷனுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பியதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், வருமான வரித்துறையினரின் சோதனை இரவு வரை நீடித்தது.

மேலும், நேரம் செல்ல, செல்ல தி.மு.க. தொண்டர்கள் அந்த பகுதியில் குவிந்து வருவதால் தூத்துக்குடியில் பதற்றம் நிலவி வருகிறது.

கீதாஜீவன் எம்.எல்.ஏ. பேட்டி

இதற்கிடையே, கனிமொழி வீட்டின் முன்பு திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் கீதாஜீவன் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-

கனிமொழி வீட்டில் அனைத்து அறைகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். ஆனால் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், கனிமொழிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காகவும் இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இந்த சோதனையை தொடர்ந்து இங்கு தேர்தலை ரத்து செய்வதற்காக எதிர்க்கட்சியினர் ஈடுபடுகின்றனர். ஆனாலும் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story