சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரியகோவில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்


சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரியகோவில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 17 April 2019 4:00 AM IST (Updated: 17 April 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

தஞ்சாவூர்,

மாமன்னன் ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தஞ்சை பெரியகோவில் இன்றைக்கும் வானுயர உயர்ந்து நின்று தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றி கொண்டு இருக்கிறது. உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சாமி புறப்பாடும், மாலையில் பரதநாட்டியமும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.

விழாவின் 15-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக அதிகாலை 5.15 மணிக்கு தஞ்சை பெரிய கோவிலில் சாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜைகள் முடிந்தவுடன் அலங்கரிக்கப்பட்ட அஸ்திரதேவர், விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், நீலோத்பாலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர், கமலாம்பாள் ஆகிய சாமிகள் தஞ்சை பெரியகோவிலில் இருந்து முத்துமணி அலங்கார சப்பரத்தில் புறப்பாடு நடைபெற்றது. ஒன்றன்பின் ஒன்றாக தஞ்சை மேலவீதியில் உள்ள தேர்நிலை மண்டப பகுதியை வந்து அடைந்தது.

பின்னர் தியாகராஜர், கமலாம்பாள் ஆகியோர் அலங்கரிக்கப்பட்டிருந்த 40 அடி உயர தேரில் எழுந்தருளினர். ஓதுவார்கள் தேவார பாடல்களை பாடினர். தொடர்ந்து தேரில் எழுந்தருளிய தியாகராஜர்-கமலாம்பாளுக்கு சிவாச்சாரியார்கள் ஆகம பூஜைகளை செய்து தீபாராதனை காண்பித்தனர். இதையடுத்து தேரை காலை 6 மணிக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆண், பெண் பக்தர்கள் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... என்று பக்தி பரவசத்துடன் கோஷங்கள் எழுப்பியவாறு தேரை வடம்பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்து ஆடி வந்த காட்சி, கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

தேருக்கு முன்னால் அஸ்திரதேவர், விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியர் ஆகிய சாமிகள் எழுந்தருளிய சப்பரங்கள் புறப்பட்டு சென்றது. தேருக்கு பின்னால் நீலோத்பாலாம்பாள், சண்டிகேஸ்வரர் சப்பரங்கள் சென்றன. தேருக்கு முன்பாக பெண்கள் கொண்டு வந்த முளைப்பாரி ஒரு டிராக்டரில் வைக்கப்பட்டு இருந்தது. சிவலிங்கம் வடிவில் முளைப்பாரி அமைக்கப்பட்டு இருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. திருவையாறு ஐயாறப்பர் கோவில் யானை தர்மாம்பாள் தேருக்கு முன்னே சென்றது.

மேலும் தேருக்கு முன்னால் கும்மியாட்டம், கோலாட்டம், தப்பாட்டமும் ஆடி சென்றனர். தம்பை, உடும்பா, கொம்பு வாத்தியங்களும் முழங்கப்பட்டன. சிவபக்தர்கள் சிலர், சங்குகளை ஊதியபடி வந்தனர். பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக மேலவீதி பங்காரு காமாட்சி அம்மன் கோவில், மூலை அனுமார் கோவில், கொடிமரத்து மூலை, கீழவீதி, தெற்குவீதி என மொத்தம் 14 இடங்களில் தேர் நிறுத்தப்பட்டது.

தேரை நிறுத்துவதற்கு சிவப்பு கொடியும், தேர் புறப்படுவதற்கு பச்சை கொடியும் அசைக்கப்பட்டது. பக்தர்களுக்கு உதவியாக தேர் சக்கரத்தை நகர்த்த பொக்லின் எந்திரமும் பயன்படுத்தப்பட்டன. தேரை நிறுத்தும்போது முட்டுக்கட்டை போட்டு பணியாளர்கள் நிறுத்தினர்.

பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சக்கரத்தை எளிதில் நிறுத்தும் வகையில் தேரின் முன்பக்க சக்கரங்களில் நவீன பிரேக்(ஹைட்ராலிக் பிரேக்) பொருத்தப்பட்டிருந்தது. தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்து பகல் 11.35 மணி அளவில் நிலையை அடைந்தது. தேரோட்டத்தை காண கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் மேற்பார்வையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்டத்தையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.

பெரியகோவில் தேரோட்டம் ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது. தொடர்ந்து 5-ம் ஆண்டாக நடைபெற்றது. விழாவில் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் பாலசுப்பிரமணியன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story