தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: 552 மதுபாட்டில்கள், 110 லிட்டர் சாராயம் பறிமுதல் டிரைவர் உள்பட 2 பேர் கைது


தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: 552 மதுபாட்டில்கள், 110 லிட்டர் சாராயம் பறிமுதல் டிரைவர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 April 2019 11:00 PM GMT (Updated: 16 April 2019 7:13 PM GMT)

வலங்கைமான் அருகே தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி லோடு ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்ட 552 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைப்போல டீக்கடையில் வைத்து விற்கப்பட்ட 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக டிரைவர் உள்பட 2 பேரை கைது செய்து உள்ளனர்.

வலங்கைமான்,

நாடாளுமன்ற தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு முடியும் வரை 3 நாட்கள் அரசு மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் கண்காணிப்பு மற்றும் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதன்படி வலங்கைமான் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் வெட்டாறு கீழஅமராவதி பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் வந்த சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை செய்தனர். இதில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சரக்கு ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், நீடாமங்கலம் அருகே உள்ள காளாச்சேரி குடியான தெருவை சேர்ந்த முருகேசன் (வயது 42) என்பதும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அரசு மதுக்கடையில் இருந்து மதுபாட்டில்களையும் வாங்கி கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். மேலும் 552 மதுபாட்டில்களையும், சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல வலங்கைமான்-குடவாசல் மெயின்ரோட்டில் டீக்கடையில் வைத்து சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (48) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story