முல்லைப்பெரியாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி மாணவன் பலி


முல்லைப்பெரியாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி மாணவன் பலி
x
தினத்தந்தி 16 April 2019 10:30 PM GMT (Updated: 16 April 2019 7:53 PM GMT)

முல்லைப்பெரியாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

உத்தமபாளையம்,

உத்தமபாளையம் அருகே உள்ள முத்துலாபுரம் மேற்கு காலனியை சேர்ந்தவர் கனகராஜ். அவருடைய மகன் கண்ணன் (வயது 15). இவன், ராயப்பன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். அவனுடைய நண்பர்கள் ஆனந்தன் (14), நவநீதன் (15), பரத் (13). இவர்கள் ராயப்பன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கின்றனர்.

தற்போது பள்ளிக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால், இவர்கள் 4 பேரும் உத்தமபாளையத்தில் உள்ள முல்லைப்பெரியாறு தடுப்பணையில் குளித்தனர். அப்போது, திடீரென கண்ணன் தடுப்பணையில் உள்ள பாறை இடுக்கில் சிக்கி உயிருக்கு போராடினான். இதனை கண்ட அவனுடைய நண்பர்கள் அலறினர்.

அந்த சத்தம் கேட்டு, அங்கு குளித்து கொண்டிருந்த இளைஞர்கள், கண்ணனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் கண்ணன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். இதனையடுத்து அவனது உடலை மீட்டு இளைஞர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story