பெருந்துறை அருகே வெறிச்செயல்; காதல் மனைவியின் தலையை துண்டித்து கொன்ற கணவர் கைது, பல ஆண்களுடன் பழகியதால் ஆத்திரம்


பெருந்துறை அருகே வெறிச்செயல்; காதல் மனைவியின் தலையை துண்டித்து கொன்ற கணவர் கைது, பல ஆண்களுடன் பழகியதால் ஆத்திரம்
x
தினத்தந்தி 17 April 2019 12:00 AM GMT (Updated: 16 April 2019 9:00 PM GMT)

பெருந்துறை அருகே பல ஆண்களுடன் பழகியதால் காதல் மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

பெருந்துறை,

பெருந்துறை அருகே உள்ள கண்ணவேலம்பாளையம் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வெளியே ஓடி வந்து மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவரை தூக்க முயன்றனர். ஆனால் பொதுமக்களை கண்டதும் அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அந்த வாலிபரை விரட்டி சென்று பிடித்தனர். மேலும் மோட்டார்சைக்கிளின் அருகே சென்று பார்த்தபோது தலையில்லாத ஒரு பெண்ணின் உடல் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதுமட்டுமின்றி மோட்டார் சைக்கிளின் கைப்பிடியில் இருந்த ஒரு துணிப்பையில் இருந்து ரத்தம் சொட்டி கொண்டிருந்ததையும் கண்டனர். உடனே அவர்கள் அந்த பையை திறந்து பார்த்தனர். அப்போது அதனுள் பெண்ணின் தலை இருந்ததை கண்டதும் பொதுமக்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. உடனடியாக பொதுமக்கள் இதுகுறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

போலீசாரின் விசாரணையில் தெரியவந்த தகவல்கள் வருமாறு:-

கர்நாடக மாநிலம் சிமோகா பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் முனியப்பன் (வயது 25). இவரும், அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவரின் மகள் நிவேதாவும் (19) காதலித்தனர். பின்னர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 2 பேரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து முனியப்பனும், அவருடைய காதல் மனைவி நிவேதாவும் சிமோகாவில் இருந்து பெருந்துறை அருகே உள்ள மேட்டுக்கடை பகுதிக்கு வந்து அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். மேலும் முனியப்பன் அந்தப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை பார்த்தார். நிவேதா வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நிவேதா அந்தப்பகுதியில் உள்ள பல ஆண்களுடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு அவர்களுடன் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. முதலில் இதை முனியப்பன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் கடந்த ஒரு மாதமாக நிவேதாவின் செல்போன் பேச்சு எல்லை மீறியதாக இருந்தது. இதனால் அவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த முனியப்பன், அவரை கண்டித்து உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிவேதா, வீட்டில் ஒரு ஆணுடன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதை பார்த்ததும் முனியப்பன் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து அந்தப்பகுதியில் இருந்தால் பல பிரச்சினைகள் வரும் என்று கருதி, வேறு வீட்டுக்கு செல்லலாம் என்று முனியப்பன் முடிவு எடுத்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு முனியப்பனும், நிவேதாவும் மோட்டார் சைக்கிளில் வேறு பகுதியில் வாடகை வீடு பார்க்க சென்று கொண்டு இருந்தனர்.

பெருந்துறையில் உள்ள பவானி ரோட்டில் சென்றபோது 2 பேருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து முனியப்பன் அவரை அந்தப்பகுதியில் உள்ள ஒரு காட்டுக்கு அழைத்துச்சென்றார். அப்போது அவர், மற்ற ஆண்களுடன் பழகுவதை விட்டுவிடு என்று நிவேதாவிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால் இதனை நிவேதா கேட்காமல் அப்படிதான் பழகுவேன் என்று கூறியுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த முனியப்பன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நிவேதாவை குத்த முயன்று உள்ளார். இதனை நிவேதா தடுத்த போது, எதிர்பாராதவிதமாக முனியப்பனின் காது பகுதியில் கத்திக்குத்து விழுந்தது.

இதன்காரணமாக மேலும் கோபம் அடைந்த முனியப்பன் முதலில் நிவேதாவின் கழுத்துப்பகுதியில் கத்தியால் குத்தியதாக தெரிகிறது. அதனால் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். பின்னர் முனியப்பன், நிவேதாவின் கழுத்தை கத்தியால் அறுத்து தலையை துண்டித்தார்.

பின்னர் எருக்காட்டுவலசு பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் வீசுவதற்காக, நிவேதாவின் தலையை ஒரு துணிப்பையிலும், உடல் பகுதியை மோட்டார்சைக்கிளின் முன் பகுதியிலும் வைத்தபடி சென்றார்.

கண்ணவேலம்பாளையம் பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்துவிட்டார். அப்போது தான் பொதுமக்களிடம் முனியப்பன் சிக்கி உள்ளார்.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மனைவியின் கழுத்தை துண்டித்து கொலை செய்ததாக முனியப்பனை போலீசார் கைது செய்தனர். மேலும் மோட்டார்சைக்கிளின் அருகே கிடந்த நிவேதாவின் தலை மற்றும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கைது செய்யப்பட்ட முனியப்பனுக்கு காயம் இருந்ததால் அவரை பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அவரை போலீசார் கொடுமுடி முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு குமாரவர்மன் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காதல் மனைவியின் கழுத்தை துண்டித்து, கணவர் கொலை செய்த இந்த பயங்கர சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story