கன்னியாகுமரி உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் தனுஷ்கோடி ஆதித்தன் பேட்டி


கன்னியாகுமரி உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் தனுஷ்கோடி ஆதித்தன் பேட்டி
x
தினத்தந்தி 16 April 2019 11:15 PM GMT (Updated: 16 April 2019 9:17 PM GMT)

மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. கன்னியாகுமரி உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கூறினார்.

நாகர்கோவில்,

தமிழகத்தில் உள்ள 39 தொகுதி மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 தொகுதிகளிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றியை பெறுகிற நிலை இருக்கிறது. அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஓட்டுக்காக பல இடங்களில் 1000 ரூபாய் கொடுப்பதாக அறிகிறேன். ஆனால் அதையெல்லாம் மீறி 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க.- காங்கிரஸ் அமோக வெற்றியை பெறும்.

ஏனென்றால் இந்தியா முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு ஆதரவான அலை வீசிக்கொண்டிருக்கிறது. எனவே மிகப்பெரிய வெற்றியை தி.மு.க.- காங்கிரஸ் பெற இருக்கிறது. மோடி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன், 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தருவேன், விவசாய பொருட்களுக்கு இரண்டு மடங்கு விலை உயர்த்தி கொடுப்பேன் என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை.

அதே போலத்தான் மத்திய மந்திரியான பொன்.ராதாகிருஷ்ணனும் பல வாக்குறுதியை தந்து, அதை நிறைவேற்றவில்லை. இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவேன் என்றார். 5 ஆண்டு ஆகியும் எதுவும் செய்யவில்லை. நாகர்கோவில் நகரத்தை ஸ்மார்ட் சிட்டி, தொழிற்பூங்கா, சித்தா பல்கலைக்கழகம், விவசாய பல்கலைக்கழகம், ரப்பர் பூங்கா, மீனவர்களுக்கான புனரமைப்பு திட்டங்கள் போன்றவற்றை நிறைவேற்றித்தருவேன் என்று வாக்குறுதி அளித்தார். இதில் எதையும் அவர் நிறைவேற்றவில்லை.

காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் வெற்றி பெற்றால், குமரி மாவட்டத்துக்கு அற்புதமான வளர்ச்சி திட்டங்களை பெற்று தரக்கூடிய வல்லமையும், சக்தியும் அவருக்கு இருக்கிறது. எனவே மக்கள் அவருக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் வளமான திட்டங்களை குமரி மாவட்டத்துக்கு பெற்று தருவார் என்ற உறுதியை உங்களுக்கு அளிக்கிறேன்.

இவ்வாறு தனுஷ்கோடி ஆதித்தன் கூறினார்.

பேட்டியின் போது முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி எஸ்.கே.டி.பி.காமராஜ், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story