மாவட்ட செய்திகள்

நாளை நாடாளுமன்ற தேர்தல், பாதுகாப்பு பணியில் 4,059 பேர் ஈடுபடுவார்கள் - போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தகவல் + "||" + 4,059 people will be involved in security work

நாளை நாடாளுமன்ற தேர்தல், பாதுகாப்பு பணியில் 4,059 பேர் ஈடுபடுவார்கள் - போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தகவல்

நாளை நாடாளுமன்ற தேர்தல், பாதுகாப்பு பணியில் 4,059 பேர் ஈடுபடுவார்கள் - போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தகவல்
கடலூர் மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் 4,059 பேர் ஈடுபடுவார்கள் என்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கூறினார்.
கடலூர்,

நாடாளுமன்ற தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தலை அமைதியான முறையில் நடத்த தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு சென்று, வாக்குப்பதிவு முடிந்ததும் அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாது காப்பாக வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லும் வரை கண்காணிக்க 195 நடமாடும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு தலா ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அல்லது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் செயல்படும். இந்த குழுவினர் செல்வதற்கும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை கொண்டு செல்லவும் வாகனங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. அந்த வாகனங்கள் நேற்று கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் அந்த குழுவில் இடம் பெற்றுள்ள போலீசார், ஓய்வு பெற்ற போலீசார், முன்னாள் ராணுவ வீரர்கள் வந்திருந்தனர்.

அவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அறிவுரை வழங்கினார். அப்போது தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் விதிகளை அறிந்திருக்க வேண்டும். வாக்குச்சாவடி சீட்டு மட்டும் வைத்திருந்தால் வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது. தேர்தல் ஆணையம் அறிவித்த அடையாள அட்டைகளை கொண்டு வந்தால் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்க வேண்டும்.

வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்போன் கட்டாயம் கொண்டு செல்லக்கூடாது. 200 மீட்டர் தூரத்துக்குள் சாமியானா பந்தல் போட அனுமதிக்கக்கூடாது. 200 மீட்டருக்கு மேல் மேஜை, நாற்காலிகள் மட்டும் போட்டுக்கொள்ள அனுமதிக்கலாம் போன்ற பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

பின்னர் இது பற்றி போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடலூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,878 போலீசார் உள்பட 4 ஆயிரத்து 59 பேர் ஈடுபடுவார்கள்.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 12 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் தலா ஒரு அதிவிரைவுப்படை நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 5 இடங்களில் அதிவிரைப்படை தயார் நிலையில் உள்ளது. தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்ட விரோத செயலில் ஈடுபட்ட 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 380 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உரிமம் பெற்று வைத்திருந்த 288 துப்பாக்கிகள் போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

106 பதற்றமான வாக்குச்சாவடிகளில் 4 கம்பெனி துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இது தவிர 4 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கூறினார்.