சீர்காழி சட்டைநாதர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்


சீர்காழி சட்டைநாதர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
x
தினத்தந்தி 17 April 2019 10:30 PM GMT (Updated: 17 April 2019 6:55 PM GMT)

சீர்காழி சட்டைநாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சீர்காழி,

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் உமாமகேஸ்வரன், உமாமகேஸ்வரி, சண்டிகேஸ்வரர், விநாயகர், முருகன், வள்ளி தெய்வானை ஆகிய சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்யப்பட்டன. அப்போது அங்கு திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் மேள-தாளங்கள் முழங்க தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் கோவிலின் 4 வீதிகளின் வழியாக சென்று கோவில் நிலையை அடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர். சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருக்கல்யாணம்

முன்னதாக கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலைநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சீர்காழியில் உள்ள நாகேஸ்வரமுடையார் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கு மற்றும் சீர்வரிசை பொருட்களை பக்தர்கள் வாண வேடிக்கை மற்றும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்றனர். பின்னர் பிரம்மபுரீஸ்வரர்- திருநிலைநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் தியாகராஜன், கோவில் கணக்கர் செந்தில் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.

Next Story