வெடிகுண்டு வீச்சில் காயமடைந்த வாலிபர் சாவு - சரணடைந்த 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
மர்ம ஆசாமிகள் வெடிகுண்டு வீசியதில் காயமடைந்த வாலிபர் உயிரிழந்தார். இதுதொடர்பாக கோர்ட்டில் சரண் அடைந்த 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
வானூர்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே காசிபாளையத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 35). தி.மு.க. பிரமுகர். கடந்த 14-ந் தேதி இரவு புதுச்சேரி சென்றுவிட்டு கோரிமேடு வழியாக பூத்துறை சாலையில் காசிப்பாளையத்துக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் கொண்ட மர்மகும்பல் பின்தொடர்ந்தது. இதுபற்றி உதயகுமார், காசிபாளையத்தை சேர்ந்த தனது உறவினர் அருண்குமார் என்கிற மணிபாலனுக்கு (29) செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அருண்குமார், தனது உறவினர்களான ராமமூர்த்தி, பன்னீர்செல்வம், சிவக்குமார் மற்றும் சிலரை திரட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிள்களில் காசிப்பாளையம் சாலையில் எதிரே வந்தார். அப்போது உதயகுமாரை பின்தொடர்ந்து வந்தவர்களை அருண்குமார் தரப்பினர் வழிமறித்து விசாரித்தனர். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மர்ம ஆசாமிகள், தாங்கள் வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து அருண்குமார் தரப்பினரை நோக்கி வீசி விட்டு தப்பிச்சென்றனர். இதில், அருண்குமாருக்கு தலையில் பலத்த காயமும், ராமமூர்த்திக்கு லேசான காயமும் ஏற்பட்டது. இருவரும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்தநிலையில் அருண்குமார் நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். காசிப்பாளையம் கிராமத்தில் பதற்றம் நிலவி வருவதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சேரி முத்திரையர்பாளையத்தை சேர்ந்த ரங்கநாதன் (20), பொறையூரை சேர்ந்த முகேஷ் (23) இருவரும் நேற்று முன்தினம் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்தனர். பின்னர் அவர்கள், மாஜிஸ்திரேட்டு உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். சரண் அடைந்த 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வானூர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story