வாக்காளர்கள் அனைவரும் ஓட்டு போட்டு ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்


வாக்காளர்கள் அனைவரும் ஓட்டு போட்டு ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 18 April 2019 4:30 AM IST (Updated: 18 April 2019 2:33 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர்கள் அனைவரும் ஓட்டு போட்டு ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளின் பகுதிகள் அடங்கி உள்ளன. மாவட்டம் முழுவதும் 18 லட்சத்து 83 ஆயிரத்து 419 வாக்காளர்கள் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 912 இடங்களில் மொத்தம் 2 ஆயிரத்து 213 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 222 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆகும். அங்கு மைக்ரோ அப்சர்வர்கள் நேரடி கண்காணிப்பில் ஈடுபடுவதோடு துணை ராணுவப்படை வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வாக்குச்சாவடி மையம் கொண்டு வரப்பட்டுள்ளது.

வெப் கேமராக்கள் 760 வாக்குச்சாவடி மையங்களில் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 5 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வந்து உள்ளனர். இதில் 4 கம்பெனியை சேர்ந்தவர்கள் வாக்குப்பதிவு பணிக்காக பயன்படுத்தப்பட உள்ளனர். ஒரு கம்பெனியை சேர்ந்த துணை ராணுவ வீரர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட உள்ளனர். மேலும் 3 ஆயிரத்து 300 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மண்டல தேர்தல் அலுவலர்கள் மூலமாக கொண்டு செல்லப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் 10 ஆயிரத்து 624 அலுவலர்கள் பணியில் ஈடுபடுகிறார்கள். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடையும். 6 மணிக்குள் வாக்குச்சாவடி மையத்திற்குள் வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு வாக்குச்சாவடி மையங்களில் தனி வரிசை அமைக்கப்பட்டு உள்ளது. வாக்காளர்களுக்கு உதவிடும் வகையிலும், வாக்காளர்கள் எந்த கட்டிடத்திற்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்பதை விளக்குவதற்காகவும் தேசிய பாதுகாப்பு படை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. குடிநீர், கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வெயில் அதிகமாக அடிப்பதால் சாமியானா பந்தலும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

தேர்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்பட்ட பிறகு உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை மொத்தம் ரூ.2 கோடியே 11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில் ரூ.45 லட்சம் திரும்ப ஒப்படைக்கப்படாமல் உள்ளது. அதற்கான ஆவணத்தை காண்பித்தால் உடனடியாக திருப்பி தரவும் தயாராக இருக்கிறோம். தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக பெறப்பட்ட அனைத்து புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் வந்தன. அங்கு கண்காணிப்பு அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டனர். ஆனால் பணம் எதுவும் சிக்கவில்லை.

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 14 ஆயிரத்து 533 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு தேவையான 1,100 சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 11 வகையான ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.

வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு அந்தந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும். வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஈரோடு மாவட்டத்தில் செய்து முடிக்கப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடி மையங்கள், பொது இடங்களில் தேவையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் அனைவரும் கட்டாயமாக வந்து வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை சித்தோடு அருகே உள்ள ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் நடைபெற உள்ளது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. துணை ராணுவத்தினரும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

வாக்காளர்களை வாகனங்களில் ஏற்றி வந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதோடு வாகனமும் பறிமுதல் செய்யப்படும். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் ஏதாவது வழங்கப்படுகின்றதா? என்பதை பறக்கும் படை அதிகாரிகள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாக பின்பற்றி அமைதியான முறையில் தேர்தல் நடத்தி முடித்திட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கதிரவன் கூறினார்.

Next Story